சிலுவையில் அறையப்பட்டவர்முன் செபிக்கும் புனித பிரான்சிஸ், எல் கிரேக்கோ வரைந்த ஓவியம்
காணொளி
பாவத்தை வெல்வதற்கு இறைவனின் இரக்கம் தேவை. பல வேளைகளில் நமது சொந்த முயற்சியால் பாவத்தை வெல்ல முயல்கிறோம். இது பயனற்ற முயற்சியே; ஏனெனில் உங்கள் சொந்த முயற்சியால் உங்கள் பாவத்தை ஒருபோதும் வெல்ல முடியாது. நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுபட ஒரே ஒரு வழிதான் இருக்கிறது; கிறிஸ்துவின் சிலுவையின் இரக்கத்தின் வழியாகப் பொழியப்படும் இறைவனின் உருமாற்றும் வல்லமையை நாடுவதே அந்த வழி. உங்கள் வாழ்வில் பழக்கமாகிவிட்ட ஒரு பாவத்தை நீங்கள் கண்டறிந்து, அதை பாவசங்கீர்த்தனத்தில் அறிக்கையிட்ட பின்னரும், அடுத்த ஒரு நாளுக்குள்ளேயே மீண்டும் அதே பாவத்தில் விழுந்து, இவ்வாறு திரும்பத் திரும்ப நிகழ்ந்திருக்கலாம். இறைவனின் வல்லமையை அல்லாமல், உங்கள் சொந்த வலிமையைச் சார்ந்திருக்க நீங்கள் முயன்றதே இதற்குக் காரணம். உங்கள் பாவத்தை வெல்வதற்கான ஒரே வழி இயேசுவே. உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அகற்றுவதற்கான இரக்கத்தை நாடி அவரிடம் திரும்புவதற்கு உறுதிப்பாடும் ஒருமுகக் கவனமும் தேவை. அவர்மீது முழு நம்பிக்கையும், அவரிடம் முழுமையாகச் சரணடைதலும் தேவை. இதை உங்களால் தனியாகச் செய்ய முடியாது (காண்க நாட்குறிப்பு #1087).
ஒவ்வொரு நாளும் நீங்கள் எதனுடன் போராடுகிறீர்கள்? உங்கள் பாவம் எதுவாக இருந்தாலும், உங்களால் அதை வெல்ல முடியும்; ஆனால் இரக்கத்தையும் சிலுவையின் தூய்மைப்படுத்தும் வல்லமையையும் சார்ந்திருப்பதன் வழியாக மட்டுமே அது முடியும். இயேசுவின்மீது உங்கள் பார்வையைப் பதித்து, அவரை மட்டுமே சார்ந்திருப்பதன் வழியாக இதைச் செய்ய முடியும். கிறிஸ்துவிடம் திரும்புவதே உங்கள் பொறுப்பு. தூய்மைப்படுத்துவதே அவர் ஆற்றும் செயல். நம் ஆண்டவரின் வல்லமையையும், உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அகற்றும் அவரது ஆற்றலையும் சந்தேகிக்காதீர்கள். தூய்மைப்படுத்தப்படுவது “வலியை” ஏற்படுத்தலாம்; ஆயினும், தூய்மை அடைவது சாத்தியமே. இதற்கு உங்கள் பங்கில் தியாகமும், அவரது பங்கில் இரக்கமும் தேவை. நீங்கள் எதிர்கொள்ளும் இந்த உள்மனப் போராட்டத்தைச் சிந்தித்துப் பார்த்து, உங்களை அவரிடம் முழுமையாக ஒப்படைக்க ஆழ்ந்த உறுதிகொள்ளுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, உங்கள் வாழ்விலுள்ள இந்தச் சுமையை அவர் அகற்றத் தொடங்குவார்.
ஆண்டவரே, என் பாவத்தை உம்மிடம் ஒப்படைத்து, அதை வெல்வதற்கான அருளை மன்றாடுகிறேன். நான் வலிமையற்றவன் என்பதையும், நீர் வல்லவர் என்பதையும் அறிவேன். இந்தக் கனமான சுமையை அகற்றி, என் ஆன்மாவுக்குத் தூய்மையையும் புனிதத்தையும் தந்தருளும். என் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்; என் பாவத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




