இறைவா, உமது இரக்கத்திற்கு எல்லையே இல்லை; உமது நன்மையின் கருவூலம் அளவற்றது…” (“இறைவா, உம்மைப் புகழ்கின்றோம்” திருப்பாடலுக்குப் பின் சொல்லப்படும் செபம்)
“இரக்கத்தை வெளிப்படுத்திச் செயலாக்கும் இந்நிகழ்வின் உச்சநிலையே பாஸ்கா மறைநிகழ்வு. இந்த இரக்கம் மனிதரை நீதிமானாக்கவும், தொடக்கத்திலிருந்தே மனிதரிலும், மனிதர் வழியாக உலகிலும் கடவுள் விரும்பிய மீட்பின் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுதல் என்னும் பொருளில் நீதியை மீட்டெடுக்கவும் வல்லது” (திருமடல் இரக்கத்தில் வளமிக்கவர், எண் 7).
“எனவே, முன்னோக்குள்ள மேய்ப்புப்பணி உணர்வோடும், கிறிஸ்தவ விசுவாசத்தின் இந்த நெறிமுறைகளையும் போதனைகளையும் நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களில் ஆழமாகப் பதியச் செய்யும் நோக்கத்தோடும், இரக்கத்தின் தந்தையைப் பற்றிய சிந்தனையால் உந்தப்பட்ட திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், இந்த அருட்கொடைகளைச் சிறப்பான பக்தியுடன் நினைவுகூர்வதற்காக உயிர்ப்புக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அர்ப்பணிக்க விரும்பி, இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு “இறை இரக்க ஞாயிறு” என்று பெயரிட்டார் (இறைவழிபாடு மற்றும் அருளடையாள ஒழுங்குமுறைக்கான பேராயம், இரக்கமும் பரிவும் உள்ளவர் ஆணை, 5 மே 2000).
முழுப் பலன்
I. ஒவ்வொரு முழுப் பலனுக்கும் உரிய வழக்கமான நிபந்தனைகள்:
- அருளடையாளப் பாவசங்கீர்த்தனம் [முன்னர் வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி, சுமார் 20 நாட்களுக்கு முன்போ பின்போ]
- நற்கருணை உட்கொள்ளுதல் [முன்னர் வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி, இயன்றவரை அன்றைய நாளிலேயே, அல்லது அதற்கு முந்தைய அல்லது பிந்தைய நாட்களில்]
- திருத்தந்தையின் கருத்துகளுக்காகச் செபித்தல் [குறிப்பிட்ட செபங்கள் எவையும் குறிப்பிடப்படவில்லை]
II. இந்தப் பலனுக்குரிய சிறப்பு நிபந்தனைகள்
இறை இரக்க ஞாயிறன்று
- எந்த ஓர் ஆலயத்திலோ சிற்றாலயத்திலோ, அற்பப் பாவம் உட்பட எந்தப் பாவத்தின் மீதுள்ள பற்றிலிருந்தும் முற்றிலும் விடுபட்ட மனநிலையுடன், இறை இரக்கத்தைப் போற்றும் வகையில் நடைபெறும் செபங்களிலும் பக்தி முயற்சிகளிலும் பங்கேற்றல்
- அல்லது, ஆராதனைக்காக எழுந்தேற்றப்பட்டுள்ள அல்லது நற்கருணைப் பேழையில் வைக்கப்பட்டுள்ள நற்கருணை ஆண்டவரின் திருமுன், பரலோக மந்திரத்தையும் விசுவாச அறிக்கையையும் சொல்லி, இரக்கமுள்ள ஆண்டவர் இயேசுவை நோக்கி ஒரு பக்தியான செபத்தையும் சேர்த்துச் சொல்லுதல் (எ.கா. இரக்கமுள்ள இயேசுவே, உம்மில் நம்பிக்கை கொள்கிறேன்!”)
பகுதிப் பலன்
குறைந்தபட்சம் மனத்துயரமுள்ள இதயத்தோடு, இரக்கமுள்ள ஆண்டவர் இயேசுவை நோக்கி முறையாக அங்கீகரிக்கப்பட்ட மன்றாட்டைச் சொல்லிச் செபிக்கும் நம்பிக்கையாளர்களுக்குப் பகுதிப் பலன் வழங்கப்படுகிறது. [எ.கா. இயேசுவே, உம்மில் நம்பிக்கை கொள்கிறேன். என் இயேசுவே, இரக்கமாயிரும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் மன்றாட்டு]
ஆலயத்திற்குச் செல்ல இயலாதவர்கள் அல்லது கடுமையாக நோயுற்றவர்கள்
முழுப் பலன் பெறுவதற்கான நிபந்தனைகள்:
- எந்தப் பாவத்தையும் முற்றிலுமாக வெறுத்தல்,
- பாவசங்கீர்த்தனம், நற்கருணை உட்கொள்ளுதல், திருத்தந்தையின் கருத்துகளுக்காகச் செபித்தல் ஆகிய மூன்று வழக்கமான நிபந்தனைகளையும் இயன்ற விரைவில் நிறைவேற்றும் எண்ணம் கொண்டிருத்தல்
- இரக்கமுள்ள நம் ஆண்டவர் இயேசுவின் பக்திக்குரிய திருவுருவத்தின் முன் பரலோக மந்திரத்தையும் விசுவாச அறிக்கையையும் சொல்லுதல்
- இரக்கமுள்ள ஆண்டவர் இயேசுவை நோக்கிப் பக்தியான மன்றாட்டு ஒன்றைச் சொல்லிச் செபித்தல் (எ.கா. இரக்கமுள்ள இயேசுவே, உம்மில் நம்பிக்கை கொள்கிறேன்).
இதைக்கூடச் செய்ய இயலாவிட்டால்:
- வழக்கமான முறையில் பலனைப் பெறுவதற்கென விதிக்கப்பட்ட பக்தி முயற்சியை மேற்கொள்பவர்களுடன் ஆன்மிக நோக்கில் ஒன்றிணைந்து,
- முழுப் பலனைப் பெறுவதற்கென விதிக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளையும் இயன்ற விரைவில் நிறைவேற்றும் உறுதியுடன், இரக்கமுள்ள ஆண்டவருக்குத் தங்கள் செபத்தையும் நோயினால் ஏற்படும் துன்பங்களையும் வாழ்க்கையின் இடர்ப்பாடுகளையும் ஒப்புக்கொடுத்தல்.
குருக்களின் கடமை
ஆன்ம மேய்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குருக்கள், குறிப்பாகப் பங்குக் குருக்கள் செய்ய வேண்டியவை
- திருஅவை [முழுப் பலனை] வழங்கும் இந்த ஆன்ம நல ஏற்பாட்டைப் பற்றி மிகவும் பொருத்தமான முறையில் நம்பிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
- அவர்களுடைய பாவசங்கீர்த்தனங்களைக் கேட்கத் தாமதமின்றித் தாராள மனத்துடன் முன்வர வேண்டும் [இது இறை இரக்க ஞாயிறன்றே நடைபெற வேண்டும் என்ற கட்டாயமில்லை; ஏனெனில் அது பலனைப் பெறுவதற்கான நிபந்தனை அல்ல]
இறை இரக்க ஞாயிறன்று, திருப்பலி நிறைவேற்றிய பின் அல்லது மாலைத் திருப்புகழ்மாலை செபித்த பின், அல்லது இறை இரக்கத்தைப் போற்றும் பக்தி முயற்சிகளின்போது,
- செபங்களைச் சொல்வதில் முன்னின்று வழிநடத்த வேண்டும்
- தங்கள் மக்களுக்குப் போதிக்கும்போது, தங்களால் இயன்ற போதெல்லாம் அன்பு அல்லது இரக்கச் செயல்களைச் செய்ய நம்பிக்கையாளர்களை மென்மையாக ஊக்குவிக்க வேண்டும்
