தமிழ்

சிந்தனை 167: ஆண்டவர்மீது மிகுந்த ஆவல் கொள்ளுதல்

 பெர்னார்டோ ஸ்த்ரோட்சி வரைந்த ‘திருஅவையின் செல்வங்களைப் பகிர்ந்தளிக்கும் புனித லாரன்சியார்’

காணொளி

நீங்கள் செபிக்கும்போது, அதுவும் நீண்ட நேரம் முழு முனைப்புடன் செபிக்கும்போது, ஆண்டவர் உங்கள் உள்ளத்தில் நுழைவார். அவர் உங்களுடன் உறவாடி, தமது இதயத்தை உங்கள் இதயத்துடன் ஒன்றிப்பார். இதன் விளைவுகளை நீங்கள் பல்வேறு வழிகளில் அனுபவிப்பீர்கள். பொதுவாக ஏற்படும் ஒரு விளைவு இதுதான்: கிறிஸ்துவோடு ஒன்றிப்பதில் நீங்கள் எவ்வளவு நெருக்கமாக ஈர்க்கப்படுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக இந்த ஒன்றிப்பை விரும்புவீர்கள். இந்த ஒன்றிப்பை நீங்கள் எவ்வளவு அதிகமாக விரும்புகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக ஒன்றிப்புக்குள் ஈர்க்கப்படுவீர்கள். உங்கள் செபம், உங்கள் ஒன்றிப்பும் ஆவலும் ஒன்றையொன்று வளர்க்கும் சுழற்சி விளைவை ஏற்படுத்துகிறது. இதை அறிந்திருப்பது நல்லது. அப்போதுதான், உங்கள் ஆவல்களைப் பயன்படுத்தி, வாழ்வில் இன்னும் அதிகமான புனிதத்தன்மையை நோக்கி உங்களை ஈர்க்க நம் ஆண்டவருக்கு இடமளிக்க முடியும் (காண்க: நாட்குறிப்பு #867).

வாழ்வில் நீங்கள் மிகவும் விரும்புவது எது? நீங்கள் தேடும் செல்வம் எது? இதை நேர்மையுடனும் உண்மையான மனத்துடனும் சிந்தித்துப் பார்ப்பது முக்கியம். “உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்” (மத். 6:21). வாழ்வில் ஆண்டவரே உங்கள் மிகப் பெரிய செல்வமாக இருந்தால், உங்கள் இதயம் வலிமையாக அவர்பால் ஈர்க்கப்படும். அவருடன் நெருங்கிய உறவுகொள்ள நீங்கள் ஆவல் கொள்வீர்கள்; அந்த ஆவல் உங்களை அவருக்கு அருகில் இழுத்துச் செல்லும். நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை நேர்மையுடன் சிந்தித்துப் பாருங்கள். அதனால் நீங்கள் பெறும் தெளிவு, உங்கள் முன்னுரிமைகளை மறுசீரமைக்க இடமளியுங்கள்.

ஆண்டவரே, உம்மை என் வாழ்வின் மையமான செல்வமாகக் கொண்டு, முழு இதயத்தோடு உம்மைத் தேடவும் உம்மீது ஆவல் கொள்ளவும் எனக்கு உதவியருளும். நான் உம்மிடம் ஈர்க்கப்படும்போது என் ஆவலை வளர்த்தருளும்; என் ஆவலை நீர் வளர்க்கும்போது, என்னை இன்னும் நெருக்கமாக உம்மிடம் ஈர்த்தருளும். ஆண்டவரே, என் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இறுதியில் உமக்கும் உமது திருவுளத்திற்கும் பணிசெய்யும் ஏக்கத்தால் முழுமையாக ஆட்கொள்ளப்பட வேண்டுமென்று செபிக்கிறேன். இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்.

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்