தமிழ்

சிந்தனை 230: சிலுவையின் முரண்பாடு

முள்முடி சூட்டுதல், ஜான் மீன்சே மொலெனார் வரைந்த ஓவியம்

காணொளி

கிறிஸ்துவின் திருக்காயங்களை ஆழ்ந்து சிந்திப்பதில் நாம் ஒருபோதும் சோர்வடையக் கூடாது. அவர் பெற்ற ஒவ்வொரு காயமும் எவ்வித நியாயமுமின்றி, பிறருடைய பாவங்களால் ஏற்பட்டது. அவரது குறையற்ற கைகளும் கால்களும், அவரது நெற்றியும் முதுகும், அவரது திருஇதயமும் மிகுந்த மரியாதையுடனும் ஆராதனையுடனும் அக்கறையுடனும் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவை அவ்வாறு நடத்தப்படவில்லை. மாறாக, மிகுந்த வன்மத்துடனும் கொடுமையுடனும் நடத்தப்பட்டன. உலகப் பார்வையில் இது துயரமானது. ஆனால் இறைப் பார்வையில், சாட்டையடிகள், முட்கள், ஆணிகள் அல்லது ஈட்டி ஆகியவற்றால் ஏற்பட்ட ஒவ்வொரு காயமும் அருள் நிறைவாகப் பெருக்கெடுத்து ஓடும் ஊற்றுகளைத் திறந்துவிட்டது. இறைவனின் இரக்கத்தால் மட்டுமே இத்தகைய விளைவு சாத்தியமாகிறது. நம் ஆண்டவர் தாங்கிய ஒவ்வொரு காயத்தையும் ஒரு நிலத்தடி ஊற்றாக அல்லது அனைவருக்கும் ஊட்டமளிக்க மண்ணிலிருந்து பீறிட்டு வரும் மிகத் தூய நீராக எண்ணிப் பாருங்கள். இந்த இரக்கத்தின் ஊற்றுகளிலிருந்து பாயும் நீரோடைகளில், நாம் நிறைவாகப் பருகி, அருளால் புத்துணர்வும் நிறைவும் பெற அழைக்கப்படுகிறோம் (காண்க நாட்குறிப்பு #1190).

இன்று இயேசுவின் திருக்காயங்களையே ஆழ்ந்து சிந்தியுங்கள். அவற்றைக் காணவும், அவர் தாங்கிய வேதனையைப் புரிந்துகொள்ளவும் முயலுங்கள். இவ்வாறு செய்யும்போது, அவரைத் துன்புறுத்தியவர்களின் கொடுமையால் அவரது உடலில் பட்ட சாட்டையடிகளையும் ஏற்பட்ட காயங்களையும் கடந்து பாருங்கள். ஒவ்வொரு காயத்திலிருந்தும் திறக்கப்படும் இரக்கத்தின் ஊற்றை ஆழ்ந்து சிந்தியுங்கள். இந்தக் காயங்களிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் அருளின் நீரோடைகளை உணர்ந்து, அவை தரும் புத்துணர்வைச் சுவைக்க உங்களையே அனுமதியுங்கள். கிறிஸ்துவின் பாடுகளிலிருந்து இரக்கம் பொங்கி வந்துள்ளது. இப்போது அவர் உங்களை இரக்கத்தால் நிரப்பவும், நீங்களும் தாங்கும் காயங்களிலிருந்து இரக்கத்தைப் பொழியவும் விரும்புகிறார்.

ஆண்டவரே, உமது எல்லையற்ற வல்லமைக்காகவும், நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்ததற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். அடிக்கப்படவும் சாட்டையால் அறையப்படவும் நீர் உம்மையே கையளித்து, இந்த வன்மத்திலிருந்து புதிய வாழ்வின் ஊற்றுகளைத் தோன்றச் செய்தீர். அன்பு ஆண்டவரே, இந்த நீரில் நான் நீராடுவேனாக; மேலும், இத்துணை தேவையில் இருக்கும் உலகிற்கு உமது அருளை வழங்கும் ஊற்றாக என் காயங்கள் மாறவும் நான் இடமளிப்பேனாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

புனித மோனிக்காவிடம் நவநாள் செபம்
(குறிப்பாக நெறிதவறிச் செல்லும் பிள்ளைகளுக்காகச் செபிக்கப்படுவது)
ஆகஸ்ட் 18–26

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்