சிலுவையைச் சுமக்கும் கிறிஸ்து, லொரென்சோ லொட்டோ வரைந்தது
உங்கள் வலிமைக்கு அப்பாற்பட்ட சிலுவையைச் சுமக்க ஆண்டவர் ஒருபோதும் உங்களை அனுமதிக்கமாட்டார் என்பதை அறிந்துகொள்வது முக்கியம். இதை நீங்கள் நம்புகிறீர்களா? நம்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு முன்னுள்ள பாதையில் பார்வையைப் பதித்து, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றத் துணிவுடன் முன்னேற அந்த நம்பிக்கை உங்களுக்கு உதவ வேண்டும். போராட்டங்கள் உங்களை எதிர்கொண்டால், அவை பெரிதாக இருந்தாலும்கூட, வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்திலும் ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் என்பதையும், தேவைப்பட்டால் உங்களைத் தாங்கிச் செல்கிறார் என்பதையும் உறுதியாக அறிந்திருங்கள். உங்கள் பார்வையை அவர்மீது பதித்திருந்தால், அவருடைய இரக்கத்திலிருந்தும் நிறைவான திருவுளத்திலிருந்தும் எதுவும் உங்களைப் பிரிக்க முடியாது (காண்க நாட்குறிப்பு #1607).
ஆண்டவர் உங்கள்முன் அமைத்துள்ளார் என்று நீங்கள் நம்பும் பாதையைப் பற்றிச் சிந்தியுங்கள். கடக்க முடியாத அளவுக்குப் பெரியவை என்று எந்தத் தடைகளை நீங்கள் கருதுகிறீர்கள்? அவை எதுவாக இருந்தாலும், துணிவுடனும் நம் ஆண்டவர்மீது முழு நம்பிக்கையுடனும் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். சில காரியங்கள் எவ்வளவு வேதனை தருபவையாக இருந்தாலும், இறைவனின் இரக்கத்திற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. நீங்கள் அவரை அனுமதித்தால், உங்கள்முன் உள்ள கரடுமுரடான பாதையை அவர் சீரான சாலையாக மாற்றுவார்.
ஆண்டவரே, நீர் எப்போதும் என்னோடு இருந்து, என்னை வழிநடத்திக் காத்துவருகிறீர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்வில் ஏதேனும் துன்பத்தை நான் எதிர்கொள்ளும்போது, உமது அருளை இன்னும் அதிகமாகச் சார்ந்திருப்பதற்கான வாய்ப்பாக அதைக் காண எனக்கு உதவியருளும். அன்பு ஆண்டவரே, நீர் என்னைச் செய்ய அழைக்கும் அனைத்தையும் என்னால் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன். எனக்காக நீர் அமைத்துள்ள பாதையில் நடக்க நான் உறுதிகொள்கிறேன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
திருவருகைக்காலச் செபங்களும் சிந்தனைகளும்
குழுசேருங்கள் எங்கள் YouTube சேனலில்!
புதிய உள்ளடக்கங்கள் குறித்த அறிவிப்புகளைப் பெறுங்கள்.
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




