படம்: stjohnpaul.org/mercy வழியாக
இரண்டு உண்மைகளை அருகருகே வைத்துச் சிந்திப்பது வியப்பளிக்கிறது. முதலாவதாக, ஒவ்வோர் ஆண்டும் உயிர்ப்புக் காலத்தின் இரண்டாம் ஞாயிறன்று இறை இரக்கப் பெருவிழா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டுமென்று தாம் விரும்புவதாக இயேசு புனித ஃபவுஸ்தினாவிடம் மீண்டும் மீண்டும் கூறியதை அவர் கேட்டார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். துறவுமடத்தின் தனிமையில் வாழ்ந்த இந்த எளிய அருட்சகோதரி அகிலத் திருஅவைக்காக இத்தகைய பணியை எவ்வாறு நிறைவேற்றுவார்? இரண்டாவதாக, 2000 ஆம் ஆண்டு இறை இரக்க ஞாயிறன்று புனித இரண்டாம் யோவான் பவுல், புனித ஃபவுஸ்தினாவுக்குப் புனிதர் பட்டம் அளித்தபோது, இறை இரக்க ஞாயிறு அகிலத் திருஅவையின் பெருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று நம் திருத்தந்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். 1931-1938 காலப்பகுதியில், மௌனத்திலும் தனிமையிலும் புனித ஃபவுஸ்தினாவின் இதயத்தில் கடவுள் இதை மீண்டும் மீண்டும் உரைத்தார். அறுபது ஆண்டுகளுக்குச் சற்றுப் பின் அது நிறைவேறியது (காண்க நாட்குறிப்பு #1680).
உங்கள் சொந்த ஆற்றலால் செய்ய முடியும் என்று நீங்கள் கற்பனை செய்வதைவிட மிக அதிகமானவற்றைச் செய்யக் கடவுள் உங்களை அடிக்கடி அழைக்கிறார் என்ற உண்மையைச் சிந்தித்துப் பாருங்கள். அவருடைய தெளிவான, மென்மையான குரலை நீங்கள் கவனமாகக் கேட்டு, அவருடைய கட்டளைகளுக்குச் செவிசாய்த்தால், ஆண்டவர் உங்கள் வாழ்வின் வழியாக வியத்தகு செயல்களைச் செய்வதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். அச்செயல்கள் எல்லாருக்கும் தெரியும்படியும் எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும்படியும் மிக வெளிப்படையாக அமையாமல் இருக்கலாம்; ஆனால், நீங்கள் சாத்தியம் என்று நினைத்ததைவிட அவை மிக மேலானவையாக இருக்கும். உங்கள் வாழ்வுக்கான கடவுளின் திருவுளத்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிடாதீர்கள்; அவர் உங்களைச் செய்ய அழைப்பதை நம்பவும் தயங்காதீர்கள். “ஆம்” என்று சொல்லி, மீதியை அவரிடம் விட்டுவிடுங்கள்.
ஆண்டவரே, நீர் என்னை எதற்காக அழைத்தாலும் நான் “ஆம்” என்று சொல்கிறேன். என் அன்றாடக் கடமைகளை உமக்குப் பலியாக ஒப்புக்கொடுத்து, அமைதியான, மறைவான வாழ்வை நான் வாழ வேண்டும் என்பதே உமது திருவுளமானால், நான் “ஆம்” என்று சொல்கிறேன். என் வாழ்வு எல்லாரும் அறியும்படி மிக வெளிப்படையாக அமையவும், இவ்வழியில் திருஅவையின் நன்மைக்காக நீர் என்னைப் பயன்படுத்தவும் வேண்டும் என்பதே உமது திருவுளமானால், அப்போதும் நான் “ஆம்” என்று சொல்கிறேன். ஆண்டவரே, என் வாழ்வு உமக்கே உரியது; உமது திருவுளப்படி என்னை நடத்தும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
புனித அந்திரேயாவின் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபம்
மரபுப்படி நவம்பர் 30 முதல் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முந்தைய நாள் வரை நாள்தோறும் 15 முறை செபிக்கப்படுகிறது.
திருவருகைக் காலத்திற்கான வளங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




