யாக்கோபோ திந்தொரெத்தோ வரைந்த மரியாவின் சந்திப்பு
சில வேளைகளில் வாழ்க்கை கடினமாக இருப்பதாக உணர்கிறோம். நமது ஆன்மிக வாழ்வு வறண்டதாகவோ தாங்க முடியாததாகவோ தோன்றலாம். நமது பாவங்களை மேற்கொள்வது நம்மால் இயலாததாகத் தோன்றலாம். கடவுளோடு நமக்குள்ள உறவை வளர்ப்பதும் மிகவும் கடினமாகத் தோன்றலாம். ஆனால் இந்த அனுபவங்கள் அனைத்தும் கடவுளையும் அவரது இரக்கத்தையும் இன்னும் அதிகமாகத் தேட நம்மை அழைக்கும் அருள்கொடைகளே. நமக்குத் தேவைப்படும்போது நாம் பெறும் ஓர் அருள்கொடை, பிறர் வழியாகக் கடவுள் நமக்கு அளிக்கும் நட்பும் வழிகாட்டுதலும் ஆகும். பிறரிடம் இயேசுவைத் தேடுங்கள். உங்கள் வாழ்வில் அவர் இடம்பெறச் செய்யும் மனிதர்கள் வழியாக அவரது இதயம் உங்கள் இதயத்தைத் தொட அனுமதியுங்கள். கடவுள் புனிதரிடம் மட்டுமல்ல, பாவியிடமும் இருக்கிறார். ஒவ்வோர் ஆன்மாவிலும் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டறியத் தேடுங்கள் (காண்க நாட்குறிப்பு #53).
உங்கள் வாழ்வில் கடவுள் இடம்பெறச் செய்துள்ள மனிதர்களைப் பற்றி இன்று சிந்தியுங்கள். உங்கள் குடும்பத்தினரிலிருந்து தொடங்குங்கள்; நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் சிந்தியுங்கள். சிலரை ஒரே ஒரு முறை மட்டுமே சந்திக்கலாம்; வேறு சிலரை நாள்தோறும் சந்திக்கலாம். அவர்கள் ஒவ்வொருவரிலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதரிலும் கடவுளைச் சந்திக்க நீங்கள் தேடுகிறீர்களா? வெளித்தோற்றத்தைக் கடந்து பார்த்து, அவர்களில் கடவுள் குடிகொண்டிருப்பதைக் கண்டறிய முயலுங்கள். நீங்கள் அவரைக் காணும்போது, நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இன்னும் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.
ஆண்டவரே, நீர் எங்கள் ஒவ்வொருவரிடமும் வந்து எங்களுக்குள் வாழ்வதாக வாக்களிக்கிறீர். நான் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் உமது இறைப் பிரசன்னத்தை இடைவிடாமல் தேட எனக்கு உதவியருளும். என் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும், பணியிடத்திலும் சமூகத்திலும் உள்ளவர்களிடமும் உம்மைக் கண்டுகொள்ள எனக்கு உதவியருளும். போகும் வழியில் நான் சந்திக்கும் அறிமுகமற்றவரிலும், என்னைச் சுற்றியுள்ள ஒவ்வோர் ஆன்மாவிலும் உம்மைக் காண எனக்கு உதவியருளும். நான் உம்மைக் கண்டுகொள்ளும்போது, அவர்களில் உம்மை அன்பு செய்ய எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பிப்ரவரி 5: புனித அகத்தா, கன்னியும் மறைசாட்சியும்—நினைவு
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




