மாரி எல்லென்ரீடர் வரைந்த குழந்தைகளின் நண்பராக இயேசு
காணொளி
மற்றொருவருடன் கொள்ளும் நட்பு, இறைவனின் இரக்கம் நம்மை வந்தடையும் வல்லமையுள்ள ஒரு வழியாகும். ஆனால் நட்பைப் பல்வேறு நிலைகளில் வாழ முடியும். சில வேளைகளில் இந்தப் பிணைப்பு மேலோட்டமான, முக்கியத்துவமற்றவற்றின் அடிப்படையில் அமைகிறது; வேறு சில வேளைகளில் அது நம் ஆண்டவரில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ஒருவர் மற்றவருக்காகச் செபிப்பது, ஆழமான ஆன்மிக நட்பின் ஓர் அடையாளமாகும். இறைநம்பிக்கை நிறைந்த ஒரு நண்பர் உங்களுக்கு ஓர் ஆசியாகக் கிடைத்திருந்தால், ஒருவர் மற்றவருக்காகச் செபிப்பதாக உறுதிகொள்வதன் வழியாக அந்த நட்பை உறுதிப்படுத்தி ஆழப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையையும் தேவைகளையும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொண்டு, அந்தத் தேவைகளுக்காகச் செபிக்க உறுதிகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காகச் செபிப்பதன் வழியாக, உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இறைவனின் இரக்கம் பொழியப்படுவதையும், உங்களுக்கிடையேயான பிணைப்பு ஆண்டவரில் ஆழப்படுவதையும் கண்டறிவீர்கள். இது இறைவனின் இரக்கத்தால் கிடைக்கும் ஓர் ஆசியாகவும், அந்த இரக்கம் தொடர்ந்து பொழியப்படுவதற்கான ஓர் ஊற்றாகவும் விளங்குகிறது (காண்க நாட்குறிப்பு #1171).
உங்களுக்கு உள்ள நட்புகளைக் குறித்து சிந்தியுங்கள். ஒவ்வொரு நட்பிற்கும் அடிப்படையாக இருப்பது எது? ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருக்கலாம். சில, பொதுவான ஓர் ஆர்வத்தின் அடிப்படையில் அமைந்த சாதாரண அறிமுகங்களாக இருக்கலாம். மற்றவை, உங்களை ஒன்றிணைக்கும் ஆழமான பிணைப்பின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். நீங்களும் உங்கள் நண்பர்களும் இறைவன்மீது கொண்டுள்ள அன்பின் அடிப்படையில் அமைந்த நட்புகளைப் பற்றி இன்று சிறப்பாகச் சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள். இத்தகைய நட்பு உங்களுக்கு ஓர் ஆசியாகக் கிடைத்திருந்தால், இணைந்து செபிப்பதன் வழியாக அதை ஆழப்படுத்த முயலுங்கள். உங்கள் நண்பருக்கு மிகத் தேவையாக இருப்பது எது என்பதைச் சிந்தித்து, அந்தக் கருத்திற்காகச் செபிக்க உங்களை அர்ப்பணியுங்கள். உங்கள் தேவையையும் உங்கள் நண்பருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இவ்வாறு ஒருவர் மற்றவருக்காகச் செபிப்பது, இறைவனின் இரக்கத்தைப் பெறுவதற்கான வல்லமையுள்ள ஊற்றாக அமையும்.
ஆண்டவரே, என் நட்புகளுக்காக இன்று சிறப்பாக உமக்கு நன்றி கூறுகிறேன். என் நண்பர்களை உமக்கு ஒப்புக்கொடுத்து, அவர்கள்மீது அருளை நிறைவாகப் பொழியுமாறு வேண்டுகிறேன். ஆண்டவரே, என் நண்பரின் வாழ்வில் உள்ள இந்தக் குறிப்பிட்ட தேவையைச் சிறப்பாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் (ஒரு தேவையைக் குறிப்பிடுங்கள்). அன்பு ஆண்டவரே, எங்கள் ஒவ்வொருவர்மீதும் நீர் கொண்டுள்ள மாறாத அன்பிற்காகவும், எங்கள் வாழ்வில் நீரே வழங்கும் நட்பு என்னும் நிறைவான கொடைக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
ஆகஸ்ட் 13 – மறைசாட்சிகளான புனிதர்கள் திருத்தந்தை போந்தியான், அருள்பணியாளர் இப்போலித்து
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




