தமிழ்

சிந்தனை 39: ஆன்மிக ஆறுதலை இழத்தல்

இரு கள்வர்களுக்கு இடையே சிலுவையில் கிறிஸ்து — பீட்டர் பால் ரூபென்ஸ் வரைந்தது

காணொளி

நாம் இயேசுவைப் பின்பற்றுவதால், நாம் செய்யும் அனைத்திலும் தொடர்ந்து ஆறுதலும் தேறுதலும் பெற வேண்டும் என்று எண்ணும் கண்ணியில் எளிதாக விழுந்துவிடலாம்.  அது உண்மையா? ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். ஒருவகையில், நாம் எப்போதும் இறைத்திருவுளத்தை நிறைவேற்றி, அதை நிறைவேற்றுகிறோம் என்பதை அறிந்திருந்தால், நமது ஆறுதல் தொடர்ந்திருக்கும். எனினும், கடவுள் தமது அன்பினால் நம் ஆன்மாவிலிருந்து ஆன்மிக ஆறுதல்கள் அனைத்தையும் அகற்றும் நேரங்களும் உண்டு. கடவுள் தொலைவில் இருப்பதுபோல் நாம் உணரலாம்; குழப்பத்தையும், ஏன், துயரத்தையும் நம்பிக்கையின்மையையும்கூட அனுபவிக்கலாம். ஆனால், இந்தத் தருணங்கள் நம்மால் கற்பனை செய்யக்கூடிய மிகப் பெரும் இரக்கத்தின் தருணங்களாகும். கடவுள் தொலைவில் இருப்பதுபோல் தோன்றும்போது, அது பாவத்தின் விளைவல்ல என்பதை உறுதிசெய்ய நாம் எப்போதும் நம் மனச்சான்றை ஆய்வு செய்ய வேண்டும். நம் மனச்சான்று தெளிவாக இருக்கும்போது, கடவுளின் பிரசன்னத்தைப் புலன்களால் உணர முடியாத நிலையிலும் ஆன்மிக ஆறுதல்களை இழந்த நிலையிலும் நாம் மகிழ வேண்டும். ஏன்? ஏனெனில், நாம் எப்படி உணர்ந்தாலும் கீழ்ப்படிதலுடனும் பிறரன்புடனும் வாழ அவர் நம்மை அழைப்பதால், இது கடவுளின் இரக்கச் செயலாகும். உடனடியான ஆறுதல் எதையும் நாம் உணராவிட்டாலும், அன்பு செய்யவும் பணிபுரியவும் நமக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது நமது அன்பை மேலும் வலுப்படுத்தி, கடவுளின் தூய இரக்கத்தோடு நம்மை இன்னும் உறுதியாக இணைக்கிறது (காண்க நாட்குறிப்பு #68).

நீங்கள் மனம் தளர்ந்தோ துயருற்றோ உணரும் அக்கணமே கடவுளிடமிருந்து விலகிச் செல்லத் தூண்டும் சோதனையைப் பற்றிச் சிந்தியுங்கள். அன்பு செய்ய மனமில்லாதபோதும் அன்பு செய்வதற்கான கொடைகளாகவும் வாய்ப்புகளாகவும் இத்தருணங்களைக் காணுங்கள். இரக்கத்தால் உருமாற்றப்பட்டு, இரக்கத்தின் மிகத் தூய வடிவமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இவை.

ஆண்டவரே, நான் எப்படி உணர்ந்தாலும், உம்மையும் என் வாழ்வில் நீர் இடம்பெறச் செய்துள்ள அனைவரையும் அன்பு செய்யத் தீர்மானிக்கிறேன். பிறரை அன்பு செய்வது எனக்குப் பெரும் ஆறுதலைத் தந்தால், உமக்கு நன்றி கூறுகிறேன். பிறரை அன்பு செய்வது கடினமாகவும் வறட்சியாகவும் வேதனை தருவதாகவும் இருந்தாலும், உமக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, என் அன்பைத் தூய்மைப்படுத்தி, உமது இறை இரக்கத்தின் இன்னும் உண்மையான வடிவமாக மாற்றியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பிப்ரவரி 8: புனித ஜெரோம் எமிலியானி, நிறுவனர் & புனித ஜோசப்பின் பக்கித்தா, கன்னி
இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், திருவழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்