தமிழ்

சிந்தனை 179: அக வறட்சியை எதிர்கொள்ளுதல்

பாலைநிலத்தில் புனித எரோணிமுஸ், ஓவியர்: பின்துரிக்கியோ

காணொளி

“ஆண்டவர் அளிக்கிறார், ஆண்டவர் எடுத்துக்கொள்கிறார்…” (யோபு 1:21).  இது எவ்வளவு உண்மையானது!  கடவுளின் நிறைவான ஆறுதலை நாம் அனுபவிக்கும் வேளைகள் வாழ்வில் உண்டு.  குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி நிலவும் தருணங்களாகவோ, மற்றொருவரின் நிபந்தனையற்ற அன்பை நாம் அனுபவிக்கும் வேளைகளாகவோ அவை இருக்கலாம்.  சில வேளைகளில், நமது செப வாழ்வில் கடவுளின் வல்லமைமிக்க உடனிருப்பை உணர்ந்து மகிழ்ச்சியால் நிறைகிறோம்.  ஆனால், கடவுள் தொலைவில் இருப்பதுபோல் தோன்றி, நமது ஆன்மா ஆறுதலின்றி வாடும் வேறு பல தருணங்களும் வாழ்வில் உள்ளன.  இதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.  பாவத்தால் இந்நிலை ஏற்பட்டிருந்தால், அந்தப் பாவத்தை நேர்மையாக எதிர்கொண்டு, பாவசங்கீர்த்தனம் செய்து, முன்னோக்கிச் செல்லுங்கள்.  ஆனால், இது எந்தப் பாவத்தின் விளைவாகவும் இல்லையென்றால், நீங்கள் எப்படி உணர்ந்தாலும், உங்கள் நம்பிக்கையையும் கடவுள்மீதான உங்கள் அன்பையும் ஆழப்படுத்திக்கொள்ள இது ஓர் வாய்ப்பு என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  இது உண்மையான ஓர் அருள். நம் உள்ளத்தில் ஏறக்குறைய எந்த உணர்வும் இல்லாதபோதும், நம்பிக்கை கொள்ள நம்மை அழைக்கும் அளவுக்குக் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் (காண்க: நாட்குறிப்பு #943).

இப்போது உங்கள் ஆன்மாவில் என்ன அனுபவிக்கிறீர்கள்?  கடவுள் அருகில் இருப்பதை உணர்கிறீர்களா? அந்த நெருக்கம் உங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறதா?  அல்லது கடவுள் உங்களிடமிருந்து மறைந்திருப்பதுபோல், வறட்சியையும் ஆறுதலற்ற நிலையையும் உணர்கிறீர்களா?  ஒவ்வோர் அனுபவத்திலும் நாம் மகிழ வேண்டும்; ஒவ்வொரு தருணத்திற்கும் தேவையான அருளைக் கடவுள் நமக்கு அளிக்கிறார் என்பதை அறிந்திருக்க வேண்டும்.  நீங்கள் எப்படி உணர்ந்தாலும், இன்று உங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.  குறிப்பாக, மிகுந்த அக வறட்சியை உணரும் தருணங்களில் அவ்வாறு செய்யுங்கள்.  அந்தத் தருணங்களில் நீங்கள் வெளிப்படுத்தும் நம்பிக்கை, நீங்கள் உணர்வதைவிடவும் அதிகமாகக் கடவுளின் இரக்கத்தின் வாயில்களை உங்களுக்கும் உலகிற்கும் திறந்துவிடும்.

ஆண்டவரே, இப்போதும் எப்போதும் நான் உம்மை அன்பு செய்கிறேன்; நான் எப்படி உணர்ந்தாலும், உம்மீதான என் அன்பைப் புதுப்பிக்கிறேன்.  நல்ல காலங்களிலும் கடினமான காலங்களிலும் உம்மை அன்பு செய்யவும், உம்மீது நம்பிக்கை கொள்ளவும், உம்மை நம்பியிருக்கவும் நான் தேர்ந்துகொள்கிறேன்.  நீரே ஆறுதலின் இறைவனும் அக வறட்சியின் இறைவனும் ஆவீர்.  என்ன நேர்ந்தாலும் நான் உம்மையே தேர்ந்துகொள்கிறேன்.  இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூலை 28 – புனித இரனேயுஸ், ஆயரும் மறைசாட்சியும்
இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், திருவழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்