தமிழ்

தியானம் 66: இரக்கத்தின் வழியாக நீதி

இதோ மனிதன் — வரைந்தவர்: குவின்டென் மெட்சிஸ்

காணொளி

சிலர் நாள்தோறும் மற்றொருவரின் கடுமையையும் கொடுமையையும் அனுபவிக்கிறார்கள்.  இது மிகுந்த வேதனை தருகிறது.  இதனால், வேதனை ஏற்படுத்துபவர் தம் செயல்களுக்குப் பொறுப்பேற்கும்படி நீதி கிடைக்க வேண்டும் என்ற வலுவான விருப்பம் எழலாம்.  ஆனால் உண்மையான கேள்வி இதுதான்: ஆண்டவர் என்னை என்ன செய்ய அழைக்கிறார்?  நான் எவ்வாறு பதில்செயலாற்ற வேண்டும்?  கடவுளின் சினத்திற்கும் நீதிக்கும் நான் ஒரு கருவியாக இருக்க வேண்டுமா?  அல்லது இரக்கத்தின் கருவியாக இருக்க வேண்டுமா?  இரண்டுமே என்பதுதான் பதில்.  இவ்வாழ்வில் கடவுளின் நீதி, அவரது இரக்கத்தின் வழியாகவும் நமக்குத் தீங்கிழைப்போருக்கு நாம் காட்டும் இரக்கத்தின் வழியாகவும் நிறைவேற்றப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதே முக்கியம்.  இப்போதைக்கு, பிறர் நம்மீது எய்யும் அம்புகளை நற்பண்புடன் ஏற்றுக்கொள்வதே கடவுளின் நீதிக்கான வழியாகும்.  இவ்வாறு நற்பண்புடன் வாழும்போது, நாம் பொறுமையிலும் மன உறுதியிலும் வளர்கிறோம்.  இறுதியில், காலத்தின் முடிவில், கடவுள் ஒவ்வொரு அநீதியையும் சரிசெய்வார்; அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.  ஆனால் இப்போதைக்கு, அவரது எல்லையற்ற, இடையறாத இரக்கத்தை வழங்குவதன் வழியாகக் கடவுளின் நீதியைக் கொண்டுவருவதே நமது பணி (காண்க நாட்குறிப்பு #236).

பிறரால் நீங்கள் அடைந்திருக்கக்கூடிய மனக்காயங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.  உங்கள் இதயத்தைத் தைத்த வார்த்தைகள் அல்லது செயல்களைச் சிந்தித்துப் பாருங்கள்.  அவற்றை அமைதியுடனும் இறைவனிடம் உங்களை ஒப்புக்கொடுக்கும் மனத்துடனும் ஏற்றுக்கொள்ள முயலுங்கள்.  அவற்றைக் கிறிஸ்துவின் பாடுகளோடு ஒன்றிணைக்க முயலுங்கள். நீங்கள் இவ்வாறு தாழ்மையுடனும் பொறுமையுடனும் செயல்படுவது, கடவுளின் நேரத்திலும் அவரது வழியிலும் அவரது நீதி நிறைவேற வழிவகுக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரே, மன்னிக்க எனக்கு உதவியருளும்.  நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அநீதியின் மத்தியிலும் இரக்கம் காட்ட எனக்கு உதவியருளும்.  நீர் என் இதயத்தில் வைக்கும் இரக்கம், உமது தெய்வீக நீதியின் ஊற்றாக விளங்கட்டும்.  இவ்வாழ்வில் என்னால் புரிந்துகொள்ள முடியாத அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்; இறுதியில், உமது ஒளியில் நீர் அனைத்தையும் புதிதாக்குவீர் என்பதை அறிவேன்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பதினாறாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்

மார்ச் 7 – மறைசாட்சிகளான புனிதர்கள் பெர்பெத்துவா, பெலிசித்தா

தவக்காலத்திற்கான வளங்கள்

தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்