மக்கள் முன் நிறுத்தப்படும் கிறிஸ்து — ஓவியர்: குவின்டென் மெட்சிஸ்
வாழ்வில் பல வேளைகளில் நாம் அநீதியாக நடத்தப்படுகிறோம். அப்போது எதிர்த்துப் போராடுவதும், நம்மைத் தற்காத்துக்கொள்வதும், நீதி கிடைப்பதை உறுதிசெய்வதுமே நமது முதல் உந்துதலாக இருக்கிறது. ஆனால் இயேசு அப்படித்தான் செய்தாரா? இல்லை, அவர் அமைதியாக இருந்து, எல்லா அநீதிகளையும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் பலியாக ஏற்றுக்கொண்டார். நீதியுள்ளவரான அவரே எல்லா அநீதிகளையும் தம்மீது ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் இரண்டு செயல்களைச் செய்தார். முதலாவதாக, இந்த அநீதியைப் பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுத்து, தந்தையின் நீதியை நிறைவுசெய்தார். இதுவே நமது நம்பிக்கையின் மையமானதும் மிக ஆழமானதுமான மறைபொருள். இரண்டாவதாக, தமது முன்மாதிரியைப் பின்பற்ற அவர் நம்மை அழைக்கிறார். அவ்வாறு பின்பற்றும்போது, அநீதியாக நடத்தப்படுவதை ஏற்றுக்கொண்டு, அதை இரக்கத்துடனும் மன்னிப்புடனும் எதிர்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இதற்குப் பெரும் மனவலிமையும் அன்பும் தேவை. ஆனால், நாம் அநீதியாக அனுபவிக்கும் துன்பத்தைக் கிறிஸ்துவின் துன்பத்துடன் இணைக்க முடிந்தால், எதிர்த்துப் போராடி உலக நீதியால் கிடைக்கும் தற்காலிக மனநிறைவைப் பெறுவதைவிட அதிகமான ஆன்மாக்களைக் கடவுளுக்காக வென்றெடுப்போம் (காண்க நாட்குறிப்பு #81).
நீங்கள் எவ்வாறெல்லாம் கொடூரமாகவும் அநீதியாகவும் நடத்தப்பட்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு மிகுந்த வேதனையைத் தந்ததைச் சிந்தித்துப் பாருங்கள். இந்தத் துன்பம் உலகின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய உங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் மனக்காயத்தைக் கிறிஸ்துவின் துன்பத்துடன் இணைப்பதன் வழியாக, பல ஆன்மாக்களைக் கடவுளுக்காக வென்றெடுக்க உங்களால் முடியும். இதுவே நமது மீட்பின் மறைபொருள். இந்த மறைபொருளுக்குள் நுழையவும், அதை வாழ்வாக்கவும், அன்பின் பலியாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். இன்று இந்தத் திசையில் ஓர் அடி எடுத்து வையுங்கள்; உங்கள் மனக்காயம் இரக்கமாகக் கரைந்துவிடுவதைக் காணுங்கள்.
ஆண்டவரே, இன்று என் மனக்காயத்தையும் வேதனையையும் அனைத்துத் துன்பங்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். குறிப்பாக, வாழ்வில் நான் எதிர்கொண்ட அநீதிகளை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். என் இதயத்திலுள்ள கசப்புணர்வை முற்றிலும் நீக்கி, அதற்குப் பதிலாக உமது இறை இரக்கத்தால் அதை நிரப்பியருளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
பிப்ரவரி 11: லூர்து அன்னை
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




