படம்: pxfuel வழியாக
உங்கள் வாழ்வின் இறுதி நோக்கம் அன்பே. இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், முதன்மையாகக் கடவுளைத் தூய அன்புடன் நேசிப்பதே அதன் நோக்கம். அன்பு தூய்மையாக இருக்க வேண்டுமெனில், அது எல்லாச் சுயநலத்திலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். தூய அன்பு, நேசிக்கப்படுபவரை மட்டுமே நோக்குகிறது. நாம் கடவுளைத் தூய அன்புடன் நேசிக்கும்போது, அவர் பொருட்டே அவரிடம் நாம் ஈர்க்கப்படுவதை உணர்வோம்; ஏனெனில் அவர் மாட்சிமை மிக்கவர், நமது அன்புக்குத் தகுதியானவர்; மேலும் அவரை நேசிப்பது தகுதியும் நீதியும் ஆனது. இவ்வாறு சுயநலமின்றி, கடவுளின் மேன்மையையும் அழகையும் மட்டுமே நோக்கி நம்மால் நேசிக்க முடிந்தால், மாட்சிமை மிக்க மற்றொன்றையும் நாம் கண்டறிவோம். கடவுள்மீது நாம் கொண்டுள்ள தூய அன்பின் விளைவாக, வேறு எந்தக் கைம்மாறும் நமக்குத் தேவையில்லாத அளவுக்கு மிகுதியும் வலிமையும் கொண்ட மகிழ்ச்சியால் நாமும் நிறைக்கப்படுவதை உணர்வோம். கடவுளைத் தூய அன்புடன் நேசிப்பதன் விளைவாக நம்மை நிரப்பும் மகிழ்ச்சி மிகவும் வலிமை பெற்று, பிறர்மீதான ஆழ்ந்த, உண்மையான அன்பாகப் பொங்கி வழிகிறது. இதுவே வாழ்வின் மிகப்பெரிய நிறைவு. அளவில்லா மகிழ்ச்சியுடன் இருக்க உண்மையில் நமக்கு வேறெதுவும் தேவையில்லை (காண்க நாட்குறிப்பு #576).
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? இல்லையெனில், உங்கள் மகிழ்ச்சியின்மைக்கு எதைக் காரணமாகக் கூறுகிறீர்கள்? எதையாவது சுட்டிக்காட்டிக் குற்றம் சுமத்துவது எளிது. ஆனால், அன்பு நிறைந்த தூய இதயத்தோடு கடவுளை நேசிக்க நாம் தேர்ந்துகொள்வதன் விளைவாகவே மகிழ்ச்சி வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். உங்கள் வாழ்வில் இதை அனுபவிக்கிறீர்களா என்று சிந்தித்துப் பாருங்கள். கடவுள்மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும் பாசத்தையும் ஆழ்ந்து சிந்தியுங்கள். இந்த அன்பு எவ்வளவு வலிமையாக அல்லது எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் கடவுளைத் தூய்மையாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவும் நேசித்தால், இந்த அன்பு உங்கள் வாழ்வை மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தும்; அதனால் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி, வேறு எந்த மண்ணுலக ஆறுதலையும்விட உங்களுக்கு நிறைவை அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், முழுமையான, தூய இதயத்தோடு கடவுளை நேசிக்க நாடுங்கள்.
ஆண்டவரே, உம்மீது எனக்குள்ள அன்பு நிறைவிலிருந்து வெகுதொலைவில் இருப்பதை நான் அறிவேன். இன்று என் கண்களையும் இதயத்தையும் இன்னும் முழுமையாக உம்மை நோக்கித் திருப்ப எனக்கு உதவியருளும். இதனால் உம்மீது எனக்குள்ள அன்பு தூய்மையடைந்து, எல்லாவற்றிற்கும் மேலாக, உமது பொருட்டே நான் உம்மை நேசிக்க இயலட்டும்; ஏனெனில் என் முழு அன்புக்கும் நீர் உண்மையிலேயே தகுதியானவர். உம்மை நேசிப்பதால் விளையும் மகிழ்ச்சிக்காக, உம்மீது கொண்ட அன்போடு உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த அன்பில் நான் முழு நிறைவையும் மகிழ்ச்சியையும் காணும் அளவுக்கு அந்த மகிழ்ச்சி மிகுதியாகப் பொங்கி வழியட்டும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
ஏப்ரல் 30 – புனித ஐந்தாம் பயஸ், திருத்தந்தை
பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




