தமிழ்

சிந்தனை 125: பலியாகும் ஆன்மா

ஜான் ஜோசப் கில்பின் ஃபிளெட்சர், பொதுக் களப் படைப்பு, Wikimedia Commons வழியாக

காணொளி

துன்புறும் ஒரு குறிப்பிட்ட பணிக்காக நம் ஆண்டவர் சிலரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?  குற்றமற்றவராக இவ்வுலகில் அவர் அனுபவித்த துன்பத்தை இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்க, எண்ணிக்கையில் மிகச் சிலரான இவர்களை அவர் தேர்ந்தெடுக்கிறார்.  இந்தப் புனித ஆன்மாக்கள் பல்வேறு வழிகளில் துன்புறுகின்றனர்.  குற்றமற்றவரான இயேசுவே அனுபவித்த துன்பத்தை இவர்கள் தொடர்ந்து அனுபவிக்கின்றனர்.  இவ்வுலகில் இவர்களுக்கு மிகக் குறிப்பிட்ட ஒரு பணி உண்டு; கற்பனை செய்யக்கூடியவற்றுள் மிகப் பெரிய தியாகத்தை வேண்டி நிற்கும் பணி அது.  தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தச் சிலருக்கான நற்செய்தி என்னவென்றால், விண்ணகத்தில் இவர்களுக்காகக் காத்திருக்கும் மாட்சியின் மணிமுடி, இவ்வுலகில் இவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பத்தையும் பயனுள்ளதாக்குகிறது.  தங்கள் துன்பங்களை மகிழ்ச்சியுடன் முழுமையாக ஏற்றுக்கொண்டு, மகன் வழியாகத் தந்தைக்கு அர்ப்பணிப்பதன் மூலம், புனித பவுல் நமக்கு விளக்குவதுபோல, “கிறிஸ்துவின் துன்பங்களில் குறைவுபடுவதை” இவர்கள் நிறைவு செய்கின்றனர் (கொலோசையர் 1:24).  இந்தத் தனித்துவமான அழைப்பு ஆழமான விதத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும், கிறிஸ்துவின் மாட்சியிலும் பங்குபெறுவதற்காக, அவரது துன்பங்களில் பங்குபெற நாம் அனைவருமே அழைக்கப்படுகிறோம் (காண்க நாட்குறிப்பு #604).

உங்கள் அன்றாடத் துன்பங்களை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?  அவற்றை “இறைவனுக்கு அர்ப்பணிக்கிறீர்களா?”  நம் துன்பங்களைத் தம்முடைய துன்பங்களோடு இணைக்குமாறு இயேசு விடுக்கும் இந்த அழைப்பு உண்மையான ஓர் அழைப்பாகும்; வேறு எதையும்விட அருளைப் பெற்றுத்தரும் வாய்ப்பு இதில் மிகுதியாக உள்ளது.  இதுவே நம்மை அவருக்கு மிக நெருக்கமான சாயலாக்குகிறது.  நாம் அர்ப்பணிக்கக்கூடிய மிகப் பெரிய தியாகமும், நாம் செய்யக்கூடிய மிக வல்லமையுள்ள மன்றாட்டும் இதுவே.  உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.  அவை எத்தகையவையாக இருந்தாலும், அவற்றைவிட்டு ஓடாதீர்கள்.  அவற்றை ஏற்றுக்கொண்டு, மகிழ்ச்சியுடன் நம் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க முயலுங்கள்.

விண்ணகத் தந்தையே, இந்நாளில் என் மகிழ்ச்சிகள், பணிகள், துன்பங்கள் அனைத்தையும் உமக்குத் தருகிறேன்.  குறிப்பாக, நான் தாங்கிக்கொள்ளும் துன்பங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.  என் வாழ்வில் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் நான் அனுபவிக்கும் துன்பம், இன்னல், வேதனை அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன்.  உம் திருமகன் இயேசுவின் ஒரே நிறைவான பலியுடன் இணைத்து அர்ப்பணிக்கப்படும் அன்பின் பலியாக இவை மாறுவனவாக.  இந்த அர்ப்பணிப்பை உருமாற்றி, இவ்வுலகில் அருளின் ஊற்றாக ஆக்கியருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

உயிர்ப்புப் பெருவிழா செபங்கள்

பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்