தமிழ்

சிந்தனை 163: உங்கள் “அவலநிலையில்” கடவுளை மாட்சிப்படுத்துதல்

வரிதண்டுபவரும் பரிசேயரும் ஆக்கம்: Lawrence OP, உரிமம்: CC BY-NC-ND 2.0.

காணொளி

உங்கள் சொந்த ஆன்மாவின் அவலநிலையைக் காண்கிறீர்களா? இத்தகைய கேள்வி சிலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கடவுளின் இரக்கத்தை நாம் புரிந்துகொண்டு, அவர் மிகுதியாக மாட்சிப்படுத்தப்படுவதற்கு நமது “அவலநிலையே” வழிவகுக்கிறது என்பதை உணர்ந்தால், இத்தகைய எண்ணத்திலிருந்து நாம் விலகிச் செல்ல மாட்டோம். பலர் புனிதராக இருக்கவும், தங்களைப் புனிதராகக் காணவும் விரும்புகிறார்கள். “நான் நல்லவனாக இருந்தால், கடவுள் மகிழ்வார்” என்று நினைப்பது எளிது. ஆனால் அவரது திருமுன் நமது சிறுமையையும், ஒன்றுமில்லாமையையும், அவலநிலையையும் நாம் காணும்போதுதான் கடவுள் மிகுதியாக மாட்சிப்படுத்தப்படுகிறார் என்பதை நாம் உணரத் தவறுகிறோம். அப்போதுதான் அவர் நம் வழியாகத் தமது மாட்சியை மிக முழுமையாக வெளிப்படுத்த முடியும். கடவுளின் சாயலில் படைக்கப்பட்டதாலும், கடவுள் நமது மனித இயல்பை ஏற்றுக்கொண்டதாலும், மனிதர்கள் என்ற முறையில் நமக்கு அளவற்ற மாண்பும் மதிப்பும் உள்ளன என்பது உண்மையே. ஆனால் நமது செயல்களில், எந்த நன்மையையும் செய்ய இயலாத பாவிகளாக நாம் இருக்கிறோம். இதை நாம் உணரும்போது, கடவுள் நம்முள் வந்து தமது இரக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கதவைத் திறக்கிறோம். நமது பலவீனத்தின் வழியாக அவர் செயல்படவும், மாட்சிமிக்க செயல்களைச் செய்யவும் இடமளிக்கிறோம். இவ்வாறுதான் நாம் கடவுளுக்கு மாட்சி அளிக்கிறோம் (காண்க: நாட்குறிப்பு #836).

உங்கள் புனிதத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, கடவுளுக்காகப் பல நன்மைகளைச் செய்துவிட்டதுபோல் உங்களைப் பற்றி உயர்வாக எண்ணுகிறீர்களா? இது செருக்கு. உங்கள் பலவீனத்தையும், கடவுளின் இரக்கத்தை நீங்கள் முற்றிலும் சார்ந்திருப்பதையும் காண உதவும் புண்ணியமே தாழ்ச்சி. அவரின்றி உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர அது உதவுகிறது. புனித பவுலோடு சேர்ந்து, “அவலநிலையிலுள்ள மனிதன் நான்!” (உரோமையர் 7:24) என்று கதறவும் அது உதவுகிறது. ஆனால் அந்தக் கதறலிலும், கடவுளின் எல்லையற்ற இரக்கம் உங்கள் பலவீனத்தில் உங்களைப் பயன்படுத்துவதை உணர்ந்து, இவ்வாறு அவரது மாட்சியின் உருவமாக மாறுகிறீர்கள்.

ஆண்டவரே, என் பலவீனத்தைத் தெளிவாகக் காண எனக்கு உதவும். உமது மகத்துவத்தின் முன் என்னையே தாழ்த்தவும், அவ்வாறு தாழ்த்துவதன் வழியாக என் வாழ்வை உருமாற்றும் உமது வல்லமைக்கு என்னைத் திறந்துகொடுக்கவும் எனக்கு உதவும். அன்பு ஆண்டவரே, என் சிறுமையை உமக்கு அளிக்கிறேன். நீர் விரும்பியவாறு என் வழியாக உமது மாட்சியை வெளிப்படுத்தும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

திரு இருதய நவநாள் செபம்
நவநாள் செபத்திற்குப் பரிந்துரைக்கப்படும் தேதிகள்: ஜூன் 3 – 11, 2026
இயேசுவின் மிகப் புனித திரு இருதயப் பெருவிழா ஜூன் 12, 2026 அன்று கொண்டாடப்படுகிறது

ஜூன் 12 – இயேசுவின் திரு இருதயப் பெருவிழா

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்