தமிழ்

சிந்தனை 259: தாழ்ச்சியுள்ள ஆன்மாவின் அழகு

பரிசேயரும் வரிதண்டுபவரும், குஸ்தாவ் தொரே வரைந்த ஓவியம்

காணொளி

ஒருவரை அழகுள்ளவராக்குவது எது? மற்ற எல்லாவற்றையும்விட, தாழ்ச்சி என்னும் நற்பண்பே அவரை அழகுள்ளவராக்குகிறது. தாழ்ச்சிக்கு ஒப்பற்ற ஈர்ப்புண்டு. தொடக்கத்தில் தாழ்ச்சியுள்ள ஆன்மா சிலரை அவ்வளவாகக் கவராமல் இருக்கலாம். ஆனால் காலப்போக்கில், மிகுந்த ஆணவமும் தன்னலமும் கொண்டவரைக்கூடத் தாழ்ச்சி தன்னிடம் ஈர்த்துக்கொள்ளும். தாழ்ச்சியுள்ள ஆன்மாவின் ஆழ்ந்த ஈர்ப்பைப் புறக்கணிப்பது கடினம்; ஏனெனில் கடவுள் அந்த நபரில் நெருக்கமாகப் பிரசன்னமாயிருக்கிறார். உண்மையில், தாழ்ச்சியுள்ள ஆன்மா கேட்கும் எதையும் கடவுள் செய்வார் என்றுகூட ஏறக்குறைய சொல்லலாம். தாழ்ச்சியுள்ள அந்த இதயத்தின் வழியாகச் சிறப்பான அருள்களைப் பொழிய வேண்டிய கடமையைத் தாழ்ச்சி கடவுள்மீது சுமத்துவதுபோல் உள்ளது. தாழ்ச்சி என்பது கடவுளுக்கும் பிறருக்கும் முன்பாகத் தன்னையே முற்றிலும் வெறுமையாக்கிக்கொள்வதாகும். அதன் விளைவாக, அந்த நபர் “மறைந்துவிடுகிறார்”; கடவுள் மட்டுமே எஞ்சுகிறார். மிகச் சிறந்த திறமைகள் நிறைந்த ஒருவரின் வழியாக ஒளிர்வதைவிட, தாழ்ச்சியுள்ளவரின் வழியாகக் கடவுள் இன்னும் அதிக ஒளியுடன் ஒளிர்கிறார். கடவுள்முன் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த அளவுக்குத் தாழ்ந்து செல்கிறீர்களோ, அந்த அளவுக்குக் கடவுள் உங்கள் வழியாக அதிகமாக ஒளிர்கிறார்; அவருடைய இரக்கமும் அதிகமாகப் பொழியப்படுகிறது (காண்க நாட்குறிப்பு #1306).

நீங்கள் தாழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா? அல்லது உங்களை முன்னிறுத்தி, அனைவரின் கவனமும் உங்கள்மீதே இருக்கும்படி செய்ய முனைகிறீர்களா? மறைநூல் கூறுவதுபோல, “தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்” (லூக். 14:11) என்பதே இதில் உள்ள வியப்புக்குரிய முரண்பாடு. மாபெரும் புனிதர்கள் பலரும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர். அவர்கள் கடவுளையும் பிறரையும் அன்புசெய்வதிலேயே கவனம் செலுத்தினர். ஆனால் இறுதியில், பிறர் காணும்படி இந்த மாபெரும் புனிதர்கள் பல வேளைகளில் உயர்த்தப்பட்டனர். இன்று உங்களைத் தாழ்த்திக்கொள்வதன் வழியாக, அந்த மாபெரும் புனிதர்களில் ஒருவராக விளங்க நாடுங்கள். தாழ்ச்சியைப் பற்றிச் சிந்தித்து, அதன் மதிப்பை மனத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் வழியாகக் கடவுளின் அழகும் இரக்கமும் ஒளிரும்.

ஆண்டவரே, சில வேளைகளில் நான் ஆணவம் நிறைந்தவனாய் இருப்பதையும், அந்த ஆணவமே இந்த உண்மையை நான் ஒப்புக்கொள்ளவிடாமல் தடுப்பதையும் அறிவேன். என்னைத் தாழ்ச்சியுள்ளவனாக்கி, உமது எல்லையற்ற மாட்சிமையின்முன் என்னைத் தாழ்த்திக்கொள்ள எனக்கு உதவியருளும். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நாடவும், புகழும் மாண்பும் அனைத்தையும் உமக்கே அளிக்கவும் எனக்கு அருள்தாரும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

செப்டம்பர் 16 – மறைசாட்சிகளான புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்ரியான்—நினைவு

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்