தமிழ்

சிந்தனை 173: ஒருவரோடு ஒன்றித்திருப்பது மூவரோடும் ஒன்றித்திருப்பதாகும்

மண்ணகத் திரித்துவம், ஓவியர்: ஹெரோனிமோ அந்தோனியோ தெ எஸ்கெர்ரா

காணொளி

அதிபுனித மூவொரு கடவுள் ஒரே இறை இயல்பைக் கொண்டவராகவும், அதேவேளையில் தனித்துவமுள்ள மூன்று ஆட்களாக இருப்பவராகவும் விவரிக்கப்படுகிறார். இதனால், தனித்துவமுள்ள இந்த மூன்று ஆட்களும் நிறைவான ஒன்றிப்பில் பங்குகொள்கின்றனர். உண்மையில், அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வேறுபட்டவர்களாக இல்லாவிட்டால், அவர்கள் “ஒன்றித்திருக்க” முடியாது. ஆகவே, கடவுளை மூன்று ஆட்களில் ஒருவராக இருப்பவர் என்று குறிப்பிடுவது அவசியம். இதே ஒன்றிப்பில் பங்குபெற நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். துல்லியமாகச் சொல்வதானால், கடவுளின் இறை இயல்பை நமதாக்கிக்கொள்வதன் மூலம் நாம் அவரது இயல்பிலேயே பங்குபெறுவதில்லை. எனினும், கிறிஸ்துவில் நமது மனிதத்தன்மை கடவுளோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ளதால், தனிப்பட்ட ஆள்களாகிய நாமும் அவருடன் உறவொன்றிப்பில் வாழ அழைக்கப்படுகிறோம். நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு மணவுறவில் நுழைய அழைக்கப்பட்டிருக்கிறோம். அதிபுனித மூவொரு கடவுளின் ஆழ்ந்த ஒன்றிப்பில் பங்குபெற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து நம்மிலும், நம்மோடும், நம் வழியாகவும் வாழ வேண்டும். நமது மனித இயல்போடு கிறிஸ்து கொண்டுள்ள ஒன்றிப்பின் பயனாக நாம் அவரோடு ஒன்றாகும்போது, தந்தையோடும் தூய ஆவியாரோடும் ஒன்றாகிறோம். கடவுளுடனான இந்த ஒன்றிப்பே நாம் என்றென்றும் அறியக்கூடிய மிகப்பெரிய இரக்கச் செயலாகும் (காண்க: நாட்குறிப்பு #911-912).

இன்று, ஒன்றிப்பின் மறைபொருளைச் சிந்தித்துப் பாருங்கள். இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம்; இதை வாழ்வில் கடைப்பிடிப்பது இன்னும் கடினமாக இருக்கலாம். ஆனால் இதற்கே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். மனிதரானதன் வழியாக, இறைமகன் இறை இயல்பை மனித இயல்புடன் ஒன்றிணைத்தார். தமது இறப்பு, உயிர்ப்பு வழியாக, நாம் அவரது இறைத்தன்மையில் பங்குபெறுமாறு உயர்த்தப்படுவதற்காக, பாவத்தின் விளைவுகளிலிருந்து மனிதகுலத்தை விடுவித்தார். இதைச் சிந்தித்துப் பாருங்கள். இதைக் குறித்து இறைவேண்டல் செய்யுங்கள். இதைப் புரிந்துகொள்ள முயலுங்கள்; இதைப் பற்றிய அறிவை ஆண்டவரிடம் கேளுங்கள். இந்த மகிமைமிக்க உண்மையை நீங்கள் எந்த அளவுக்கு ஆழமாகப் புரிந்துகொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதில் பங்குபெற விரும்புவீர்கள்.

அதிபுனித மூவொரு கடவுளே, தந்தையே, மகனே, தூய ஆவியாரே, உம்மோடு ஒன்றித்திருக்க நான் விரும்புகிறேன். உமது உள்ளார்ந்த வாழ்வில் நீர் பகிர்ந்துகொள்ளும் உறவொன்றிப்பில் பங்குபெற்று, உமது வாழ்விற்குள்ளேயே ஈர்க்கப்பட ஏங்குகிறேன். ஓ, அதிபுனித மூவொரு கடவுளே, நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூன் 22 –

நோலா நகரின் புனித பவுலினுஸ், ஆயர்

புனிதர்கள் ஜான் ஃபிஷர், ஆயரும் மறைசாட்சியும், மற்றும் தாமஸ் மோர், மறைசாட்சி

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்