படத்தை வழங்கியவர் Anja தளம்: Pixabay
காணொளி
சிலர் தங்கள் ஆன்மாவின் ஆழத்தில் கடுமையான வேதனையை உணர்கிறார்கள். சில வேளைகளில் பாவம் இதற்குக் காரணமாகிறது; வேறு சில வேளைகளில், இயேசு அனுபவித்த துன்பங்களை ஆன்மா அனுபவிக்கச் செய்யும் கடவுளின் சிறப்பான இரக்கம் இதற்குக் காரணமாகிறது. எதுவாக இருந்தாலும், உங்கள் ஆன்மாவின் ஆழத்தில் எந்தவிதமான வேதனையை நீங்கள் எதிர்கொண்டாலும், கடவுளின் இரக்கத்தின்மீது உங்களுக்குச் சிறப்பான உரிமை உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள். இரக்கத்தின்மீது உங்களுக்கு இந்த “உரிமை” இருப்பது ஏன்? நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதால் அல்ல; மாறாக, கடவுள் அதை உங்களுக்கு வழங்க விரும்புவதால்தான். உங்கள் துன்பம் எவ்வளவு அதிகமோ, கடவுளின் இரக்கத்தின்மீது உங்களுக்குள்ள உரிமையும் அவ்வளவு அதிகம். ஆகவே, உங்கள் துயரத்திலும் வேதனையிலும் கடவுளிடம் ஓடிச்செல்ல அஞ்சாதீர்கள். கடவுள் உங்களை எந்த வகையிலாவது புறக்கணிப்பார் என்று அஞ்சாதீர்கள். துன்புறும் ஆன்மா மற்ற எந்த ஆன்மாவையும்விட அவருக்கு அதிக அன்புக்குரியது (காண்க: நாட்குறிப்பு #1146).
“வேதனையில் வாடும் ஆன்மா” என்பது வலிமைமிக்க ஒரு சொற்றொடர். ஆனால், பலருடைய அனுபவத்தை விவரிக்கும் மிகவும் நேர்மையான சொற்றொடரும்கூட. பலர் தங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இந்த வேதனையை உணர்கிறார்கள்; குறிப்பாகத் தங்கள் பாவங்களின் காரணமாக இவ்வாறு உணர்கிறார்கள். உள்ளத்தில் வறட்சியையும் தனிமையையும் உணர்ந்து, இந்த வேதனையின் சுழலில் சிக்கித் தவிக்கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் இதுவே உங்கள் நிலையாக இருந்தால், மற்ற எவரையும்விடத் தமது இரக்கத்தின்மீது அதிக உரிமையைக் கடவுள் உங்களுக்கு வழங்குகிறார் என்ற உண்மையைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களைத் தமது பரிவுக்குரிய சிறப்பானவராகத் தேர்ந்தெடுத்து, நீங்கள் கேட்கக்கூடிய அனைத்திற்கும் மேலாக உங்களுக்கு வாரி வழங்குகிறார். கடவுளின் இரக்கத்தை நாடும்போது உங்கள் நம்பிக்கை வளர இடமளியுங்கள். நீங்கள் உணரும் ஒவ்வொரு வேதனையிலும் அந்த இரக்கம் ஊடுருவ அனுமதியுங்கள். அதன் காரணம் எதுவாக இருந்தாலும், அது உங்கள் பாவத்திலிருந்து எழுந்தாலும், அவ்வாறே செய்யுங்கள்.
மிகுந்த பரிவுள்ள ஆண்டவரே, நீர் என்னை அன்பு செய்கிறீர், ஒருபோதும் என்னைப் புறக்கணிக்கமாட்டீர் என்பதை உறுதியாக அறிந்துகொள்ள எனக்கு உதவியருளும். உமது இரக்கத்தை நான் விசுவசிக்கிறேன்; அதை நிறைவாக வழங்க நீர் விரும்புகிறீர் என்று நம்புகிறேன். நான் வழிதவறியவனாகவும் குழப்பமடைந்தவனாகவும், என் பாவத்தால் வேதனைப்படுபவனாகவும்கூட உணரும்போது, உமது அன்பின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு உம்மை மன்றாடி, இன்னும் அதிகமாக உம்மை நாட எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
ஆகஸ்ட் 8 – அருள்பணியாளரான புனித தோமினிக்கின் நினைவு நாள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




