பரிசேயர்கள் நடுவில் கிறிஸ்து, ஜேக்கப் ஜோர்டான்ஸ் படைப்பு
காணொளி
சில வேளைகளில், மிகவும் “பக்தியுள்ளவர்களாக” இருப்பவர்கள், “பக்தி சார்ந்த” பலவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். பக்திமிகு சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்; புனிதமானவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இறுதியில், அவர்கள் சொல்வதும் செய்வதும் எல்லாமே, பிறர் முன்னிலையில் தங்களையே மகிமைப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் சொல்லப்படுபவையாகவும் செய்யப்படுபவையாகவும் இருக்கக்கூடும். பரிசேயர்களின் போராட்டம் இதுவே. வருத்தத்திற்குரிய வகையில், இந்தப் போராட்டத்தில் இருப்பவர்கள், பரிசேயர்களைப் போலவே, தாங்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக நினைத்துத் தங்களையே ஏமாற்றிக்கொள்ளக்கூடும். ஆனால் அவர்களுடைய செருக்கு அவர்களைக் குருடாக்கிவிட்டது. தாழ்ச்சியோடு கடவுளைச் சுட்டிக்காட்டி, எல்லா மகிமையையும் நமக்கல்ல, அவருக்கே செலுத்துவதே நம் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆயினும், ஆழ்ந்த தாழ்ச்சியோடும் உண்மையோடும் இதைச் செம்மையாகச் செய்யும்போது, கடவுள் உண்மையிலேயே நம்மைத் தமது மகிமைக்குள் ஈர்த்து, அவருக்கு நாம் செலுத்த வேண்டிய மதிப்பில் நாமும் பங்குபெற அனுமதிக்கிறார் என்பதை உணர்கிறோம். இவ்வாறு மட்டுமே, அவருடைய புதல்வர்களாகவும் புதல்வியர்களாகவும் நமக்குள்ள உண்மையான மாண்பை நாம் உணர்கிறோம். மேலும், அனைத்திலும் தாழ்ச்சியோடு கடவுளைச் சுட்டிக்காட்டும்போது, கடவுளே நம்மையும் உயர்த்துகிறார் (காண்க நாட்குறிப்பு #1149).
பிறர் காணும்படி உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ள முயல்வதற்குப் பதிலாக, எல்லா மகிமையையும் கடவுளுக்குச் செலுத்த உங்களால் முடிகிறதா? முழு நேர்மையோடும் தாழ்ச்சியோடும் இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், உங்களை நீங்களே உயர்த்திக்கொண்டால், உங்களால் மிக உயரத்திற்குச் செல்ல முடியாது; மாறாக, நீங்கள் நினைத்துப் பார்த்ததைவிட அதிக அவமானத்திற்குள்ளான நிலையில் இருப்பதையே காண்பீர்கள். ஆண்டவரை உயர்த்திப் போற்றி, எல்லா நன்மைகளுக்கும் ஊற்று அவரே என்பதைச் சுட்டிக்காட்டுங்கள்; உங்கள் வாழ்வை உயர்த்தும் பொறுப்பை அவரிடமே விட்டுவிடுங்கள். உங்களால் உங்களை உயர்த்திக்கொள்ள முடிவதைவிட மிக உயரத்திற்கு அவர் உங்களை உயர்த்துவார்.
ஆண்டவரே, தாழ்ச்சி என்னும் கொடைக்காக நான் மன்றாடுகிறேன். என் தாழ்ச்சியில் நான் உண்மையைக் கண்டு, அந்த உண்மையை மட்டுமே பறைசாற்ற வேண்டுமென மன்றாடுகிறேன். நன்மையானவை அனைத்தும் உம்மிடமிருந்தே வருகின்றன, உம்மாலேயே நிறைவேற்றப்படுகின்றன என்னும் உண்மையை நான் காண வேண்டுமெனச் சிறப்பாக மன்றாடுகிறேன். என் ஆண்டவரே, எல்லா மகிமையும் உமக்கே உரித்தாகுக! இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
ஆகஸ்ட் 9 – சிலுவையின் புனித தெரேசா பெனடிக்டா (எடித் ஸ்டைன்), கன்னியும் மறைசாட்சியும்
இந்நாள் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், இந்த ஆண்டு திருவழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




