தமிழ்

சிந்தனை 234: ஆழ்ந்த இறைநம்பிக்கையின் தெளிவின்மை

செபிக்கும் மூதாட்டி, கெரிட் டௌ வரைந்த ஓவியம்

காணொளி

பொதுவாக, ஒருவர் இறைநம்பிக்கையின் பயணத்தைத் தொடங்கும்போது, எண்ணற்ற உள்பார்வைகளையும் வெளிப்பாடுகளையும் பெற்று மகிழ்கிறார்.  இறைநம்பிக்கை வாழ்வின் பல்வேறு அம்சங்கள் உயிர்ப்புப் பெறுகின்றன; வாழ்வின் பல மறைபொருள்களைப் பற்றிய புரிதலும் கிடைக்கிறது.  கடவுள் தேர்ந்தெடுத்த பாதையில் ஒருவர் நடக்கத் தொடங்கும்போது, ஆன்மிக உள்பார்வையும் புரிதலும் என்னும் இந்தக் கொடை, பெரும் அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அமைகிறது.  ஆனால் காலம் செல்லச் செல்ல, ஓர் ஆன்மா இறைநம்பிக்கையின் மறைபொருள்களுக்குள் ஆழமாக நுழையும்போது, ஒருவிதத் தெளிவின்மை தோன்றத் தொடங்கலாம்.  பாவத்தினாலோ ஆன்மிகச் சோம்பலினாலோ இது ஏற்பட்டால், பாவசங்கீர்த்தனத்தின் வழியாகவும் ஆண்டவரைத் தேடுவதற்கான புதிய உறுதியின் வழியாகவும் இதற்குத் தீர்வு காண வேண்டும்.  ஆனால் ஒருவரது இறைநம்பிக்கை ஆழமடைவதன் விளைவாகவும் இந்த அனுபவம் ஏற்படலாம்.  கடவுள் தம்மை வெளிப்படுத்தும் விதம் இருளும் தெளிவின்மையும் நிறைந்ததாக அமையும் ஒரு காலம் வருகிறது.  தன்னால் புரிந்துகொள்ள இயலாது என்பதை ஆன்மா புரிந்துகொள்ளத் தொடங்குகிறது.  இறைநம்பிக்கையின் ஆழமான மறைபொருள்களை ஒரு கருத்தின் மூலமாகவோ உள்பார்வையின் மூலமாகவோ வெளிப்படுத்த முடியாது என்பதால், இது ஓர் அருட்கொடையாகும்.  நம் ஆண்டவர் தெரிவிக்கும் மிக ஆழமான செய்திகளை, மனம் இருளடைவதன் வழியாகவே தெரிவிக்க வேண்டும்.  அறிவு இருளடைகிறது; எனினும், கடவுளின் குரலைப் பற்றிய உறுதி நிலைத்திருக்கிறது (காண்க: நாட்குறிப்பு #1205).

உங்கள் அகச் செப வாழ்வைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.  உங்களுக்கென்று ஓர் “அக வாழ்வு” தெளிவாக இல்லையென்றால், அதைத் தொடங்குவதற்கான நேரம் இதுவே.  தியானத்தின் வழியாகவும் உரையாடலின் வழியாகவும் நம் ஆண்டவரைத் தேடுங்கள்; அவர் உங்களோடு பேச இடமளியுங்கள்.  உங்களுக்கு அகச் செப வாழ்வு இருந்து, கடவுளின் உடனிருப்பை நீங்கள் தொடர்ந்து உணர்ந்து வருகிறீர்கள் என்றால், இன்னும் ஆழமாகச் செல்ல முயலுங்கள்.  இவ்வாறு இன்னும் அதிகமாக அவரைத் தேடும்போது, தியானமும் உரையாடலும் உங்கள் ஆன்மாவில் இன்னும் ஆழ்ந்த மௌனத்திற்கும் தெளிவின்மைக்கும் இடமளிப்பதை உணரத் தொடங்கினால் அஞ்சாதீர்கள்.  கடவுள் ஒரு புதிய நிலையில் உங்களோடு பேசுகிறார் என்பதற்கு இது ஓர் அடையாளமாக இருக்கலாம்.  இந்த அனுபவத்தைப் பற்றி ஓர் அருள்பணியாளரிடம் பேசுங்கள். நம் ஆண்டவர் உங்களைச் செபத்தின் ஒரு புதிய நிலைக்குள் இன்னும் ஆழமாக ஈர்க்கும்போது, எல்லா வகையிலும் அவருக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருங்கள்.

ஆண்டவரே, இறைநம்பிக்கை வாழ்வின் மௌனத்திற்குள்ளும் தெளிவின்மைக்குள்ளும் ஆழமாக ஈர்க்கப்பட விரும்புகிறேன்.  இந்த மிக ஆழமான நிலையில் உம்மோடு ஒன்றித்திருக்கவும், என் ஆன்மாவின் ஆழத்தில் மாற்றம் பெறவும் எனக்கு உதவியருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

புனித மோனிக்காவிடம் நவநாள் செபம்
(குறிப்பாக நெறிதவறிச் செல்லும் பிள்ளைகளுக்காகச் செபிக்கப்படுவது)
ஆகஸ்ட் 18–26

ஆகஸ்ட் 22 – அரசியான புனித கன்னி மரியா நினைவு

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்