நோயாளிகளைக் குணமாக்கும் புனித பேதுரு, ஓவியர்: யாக்கோப் டூரென்வ்லீட்
உங்கள் குடும்பத்தில் ஒருவர் கடுமையாக நோயுற்றிருந்தால், அல்லது சிறையில் இருந்தால், அல்லது ஏதேனும் பெரிய தேவையில் இருந்தால், அது உங்களுக்கு ஒரு சுமையாக இருக்குமா, அல்லது ஆசீர்வாதமாக இருக்குமா? இதைப் பற்றிச் சிந்தியுங்கள். சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோர் உங்கள் வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறார்களா? இந்தக் கேள்விக்கு முற்றிலும் நடைமுறைக் கண்ணோட்டத்தில் பதிலளித்தால், பதில் “ஆம்” என்பதாக இருக்கலாம். ஆனால் இன்னும் ஆழமான ஆன்மிகக் கண்ணோட்டத்தில் பதிலளித்தால், தங்களது குறிப்பிட்ட தேவைகளால் நமக்குச் “சுமையாக” இருப்பவர்கள், மிகுந்த புனிதத்தில் வளர்வதற்கான வாய்ப்பை நமக்கு அளிக்கிறார்கள் என்பதே பதில். ஏனெனில், சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோர், பிறரன்போடும் பரிவோடும் இரக்கப் பணியோடும் செயல்பட நம்மை அழைக்கிறார்கள். அவர்களை ஒரு சுமையாக நாம் பார்த்தால், அருளைப் பெறுவதற்கான ஓர் அரிய வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம். கடவுள் தமது இரக்கத்தை நாம் வெளிப்படுத்தும் பொருட்டு, பிறர் துன்புறுவதையும் நம்மீது ஒரு புனிதமான சுமையைச் சுமத்துவதையும் பல வேளைகளில் அனுமதிக்கிறார். இந்தச் சிறப்பான ஆன்மாக்களைத் தேடிச் சென்று, இயேசுவின் இதயத்திலுள்ள அன்பையும் அக்கறையையும் இரக்கத்தையும் அவர்களுக்கு வழங்குங்கள் (காண்க: நாட்குறிப்பு #1268).
கடவுள் உங்கள் வாழ்வில் யாரை இடம்பெறச் செய்திருக்கிறார்? இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், உங்களிடமிருந்து கூடுதல் அக்கறை தேவைப்படும் அளவுக்குத் தனிப்பட்ட துன்பம், நோய், பலவீனம் அல்லது இடர்ப்பாட்டைச் சுமந்துகொண்டிருப்பவர் யார்? அது நோயுற்ற ஒரு குழந்தையாகவோ, மனச்சோர்வில் இருக்கும் வாழ்க்கைத்துணையாகவோ, வயதுமுதிர்ந்த தாய் அல்லது தந்தையாகவோ, வெளிப்படையாகப் பாவத்தில் வாழும் ஒருவராகவோ, உதவி தேவைப்படும் நண்பராகவோ இருக்கலாம். உங்கள் நினைவுக்கு வருபவர் யாராக இருந்தாலும், அவரையும் அவரது தேவைகளையும், நம் ஆண்டவரின் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த அவர் விடுக்கும் அருள்நிறைந்த அழைப்பாகக் காண முயலுங்கள். நீங்கள் உணரக்கூடியதைவிட மிகப் பெரிய ஆசீர்வாதமாக அவர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். கிறிஸ்துவின் இதயத்திலுள்ள பரிவும் அக்கறையும் உங்கள்வழியாக வெளிப்பட அவர்களது தேவைகள் தூண்டுகோலாக அமையட்டும்.
ஆண்டவரே, உமது இதயத்தைப் போன்ற ஓர் இதயத்தை எனக்குத் தந்தருளும். பிறரிடம் உமது நிறைவான அன்பை நான் வெளிப்படுத்தும்படி, இரக்கமும் பரிவும் நிறைந்த உமது நிறைவான இதயத்தை எனக்குத் தந்தருளும். ஒவ்வொருவரையும் ஒரு கொடையாகக் காணவும், அவர்களது எல்லையற்ற மாண்பை உணர்ந்துகொள்ளவும் எனக்கு உதவியருளும். நான் அவர்களை அன்புசெய்ய முயலும்போது, இந்தத் தன்னலமற்ற செயலின் வழியாக நான் பெறும் ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பதிவுசெய்துகொள்ளுங்கள் எங்கள் YouTube சேனலில்!
புதிய பதிவுகள் குறித்த அறிவிப்புகளைப் பெறுங்கள்.
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




