பரிசேயரான சீமோனின் வீட்டில் கிறிஸ்து, டீரிக் பவுட்ஸ் வரைந்த ஓவியம்
மிகச் சிறிய அளவு உயிர்வாயுவை மட்டுமே கொண்டு அளவற்ற ஆற்றலை உருவாக்கும் ஓர் இயந்திரத்தைப் படைத்து, அதன் வழியாக அளவற்ற இயற்கை வளங்களுக்கான ஓர் ஊற்றை நீங்கள் கண்டுபிடிப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கிய இயந்திரத்தை இயக்கினால் போதும், ஆற்றல் முடிவின்றி உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். அது உண்மையிலேயே வியக்கத்தக்க கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால், இதைப் போன்ற ஒன்று ஆன்மிக நிலையில் உண்மையாகவே இருக்கிறது. அது இயங்குவதற்கான “உயிர்வாயு” நமது துயரமும் பாவமுமே. அதன் “ஆற்றல் உற்பத்தி இயந்திரம்” இயேசுவின் திருஇதயம். அது உருவாக்கும் “ஆற்றல்” கடவுளின் முடிவற்ற இரக்கம். இதை மட்டும் நாம் புரிந்துகொண்டால், இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட வளம் நம் உலகில் அளவின்றிப் பெருக்கெடுக்கும். நம் வாழ்வின் துயரத்தைக் கடவுளிடம் ஒப்புக்கொடுக்கும்போது, அவர் அதை மாற்றியமைக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். உண்மையில், இதுவே அவரது தணியாத ஆவல். உங்கள் வாழ்வே நிறைவாக நிரப்பப்படவும், உங்கள் வழியாக உலகமும் நிறைவாக நிரப்பப்படவும், உங்கள் துயரத்தைத் தமது இரக்கமாக மாற்ற அவரது திருஇதயம் ஏங்குகிறது. உங்கள் துயரத்தையும் பாவத்தையும் கடவுளிடம் கொடுத்து, அவற்றை அவர் முடிவின்றி மாற்றியமைக்க இடமளியுங்கள் (காண்க நாட்குறிப்பு #1273).
உங்கள் சொந்தத் துயரத்தையும் பாவத்தையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவற்றை மறைத்து, மூடிமறைத்து, கண்டுகொள்ளாமல், அவை இல்லாததுபோல் பாசாங்கு செய்கிறீர்களா? பாவமும் துயரமும் இல்லாத வாழ்க்கை வாழ்வதுபோன்ற தோற்றத்தைப் பிறருக்குக் காட்டிக்கொண்டே வாழ்கிறீர்களா? சிலர் இவ்வாறு செய்கிறார்கள்; வேறு சிலரோ எதிர்முனைக்குச் சென்று, சுயபச்சாதாபத்தில் மூழ்கி, தங்கள் துயரம் ஏதோ பெருமைக்குரிய அடையாளம் என்பதுபோல் எல்லாரும் காணும்படி அதை வெளிப்படுத்துகிறார்கள். இந்த இரு அணுகுமுறைகளுமே உதவுவதில்லை. உங்கள் பாவத்தையும் துயரங்கள் அனைத்தையும் இயேசுவின் திருஇதயத்திடம் ஒப்படைப்பதே உதவும் ஒரே அணுகுமுறை. உங்களால் இதைச் செய்ய முடியும். அவ்வாறு செய்ய நீங்கள் முடிவெடுத்தால் மட்டுமே போதும். இன்றே அதைச் செய்யுங்கள். இவ்வாறு உங்களை முழுமையாக ஒப்படைக்கத் தொடங்குங்கள்; அப்போது, அனைத்தையும் இரக்கமாக மாற்றும் அற்புத வல்லமை இயேசுவின் திருஇதயத்தில் இருப்பதை நீங்கள் கண்டறிவீர்கள்.
இயேசுவின் திருஇதயமே, என் துயரத்தோடும் வேதனையோடும் உம்மிடம் ஓடி வருகிறேன்; அன்பு ஆண்டவரே, என் பாவத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன். அதை உமது இரக்கமாக மாற்றியருளும்; இக்கொடை முடிவற்ற அருளின் ஊற்றாக விளங்கச் செய்தருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
செப்டம்பர் 5 – கொல்கத்தாவின் புனித அன்னை தெரசா, கன்னி
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




