தமிழ்

சிந்தனை 251: உங்கள் இதயத்தின் உள்ளுறைவிடம்

ஒரு ரோஜாத் தோட்டம், குஸ்தாவ் பியென்வேத்து வரைந்தது

காணொளி

ஆண்டவர் உங்களிடம் வந்து, உங்கள் இதயத்திற்குள் தமது உறைவிடத்தை அமைத்துக்கொள்ள விரும்புகிறார்.  ஆனால் அவர் உங்களிடம் வரும்போது எதைக் காண்கிறார்?  உங்கள் இதயம் எந்த நிலையில் இருக்கிறது?  சில இதயங்கள் நறுமணம் வீசும் ரோஜாத் தோட்டம்போல் இருக்கின்றன.  அங்கே ஒளியும் அழகும் மாட்சியும் பொலிவும் உள்ளன.  அது அமைதியாக இளைப்பாறும் இடம்; நம் ஆண்டவரின் உடனிருப்பால் புனிதமாக்கப்பட்ட இடம்.  வேறு சில இதயங்கள் குளிரும் தனிமையும் சோகமும் நிறைந்த இருண்ட சிறையறைபோல் இருக்கின்றன.  இவை பாவச் சுழலில் சிக்குண்டு, ஆண்டவரை உள்ளே அனுமதிக்க மீண்டும் மீண்டும் தவறிய ஆன்மாக்கள்.  ஆயினும், உங்கள் இதயம் எந்த நிலையில் இருந்தாலும், அதற்குள் நுழைய அவர் விரும்பித் தீர்மானிக்கிறார்.  அது நறுமணம் வீசும் ரோஜா மலர்த்தோட்டமாக இருந்தாலும் சரி, இருளும் தனிமையும் நிறைந்த சிறையாக இருந்தாலும் சரி, ஆண்டவர் உள்ளே வர விரும்புகிறார் (காண்க நாட்குறிப்பு #1280).

உங்கள் இதயத்தின் உள்ளறையைச் சிந்தித்துப் பாருங்கள்.  இந்த உறைவிடம் எப்படிக் காட்சியளிக்கிறது?  நேர்மையுடன், மறைவான இந்த இடத்தை நம் ஆண்டவருக்குத் திறந்து காட்டுங்கள்.  உங்கள் இதயம் குளிரும் இருளும் தனிமையும் நிறைந்த, சோகமான ஒரு சிறைக்கூடம்போல் இருந்தால், மற்ற எவரையும்விட நீங்களே கடவுளின் இரக்கத்தைப் பெற அழைக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  நீங்கள் சிக்குண்டு, தனிமைப்பட்டிருப்பதாக உணரும் அந்தச் சிறையின் கதவைத் திறக்க அவர் உங்களிடம் வர விரும்புகிறார்.  இந்த இருளில் அவர் உங்களைவிட்டு விலகுவதில்லை; மாறாக, உள்ளே வருவார்.  ஆனால் அவர் உள்ளே வருவது உங்களை விடுவிப்பதற்காகவே.  உங்கள் ஆன்மாவை இனிய மகிழ்ச்சி நிறைந்த இடமாக மாற்ற அவர் விரும்புகிறார்.  இதற்கு முயற்சியும், உங்களையே ஒப்புக்கொடுத்தலும், நேர்மையும், தாழ்ச்சியும், நம்பிக்கையும் தேவை.  ஆனால் கடவுளால் எல்லாவற்றையும் செய்ய முடியும்; மிகுந்த அவலநிலையில் இருக்கும் ஆன்மாவைக்கூட அழகும் அன்பும் நிறைந்த தோட்டமாக மாற்ற முடியும்.  உங்கள் ஆன்மாவின் உள்ளறையைப் புதிதாக உருவாக்கத் தேவையான மண், சூரியன், விதை, நீர் மற்றும் அனைத்தையும் அவரது இரக்கம் வழங்குகிறது.  இந்த உண்மையைச் சிந்தித்து, இன்றே உங்கள் மாற்றத்தைத் தொடங்குங்கள்.

அன்பிற்கினிய ஆண்டவரே, என் ஆன்மாவின் உள்ளறையை உமக்கு அளிக்கிறேன்.  என்னுள் வந்து இளைப்பாறி, என் இதயத்தை உமது புனித உறைவிடமாக மாற்றியருளும்.  அன்பு ஆண்டவரே, என் முழுமையையும் எனக்குள்ள அனைத்தையும் உமக்கு அளிக்கிறேன்.  என்னை மீண்டும் படைத்து, புதிதாக்கியருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

செப்டம்பர் 8 – புனித கன்னி மரியாவின் பிறப்பு விழா

வியாகுல அன்னைக்கு நவநாள் செபம்
மரபுப்படி செப்டம்பர் 7–15 வரை செபிக்கப்படுகிறது

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்