ஹியரோனிமுஸ் போஷ், செபத்தில் புனித எரோணிமுஸ், படம்: ஃபிரான்ஸ் வான்டெவாலே, CC BY-NC 2.0
நீங்கள் செபிக்கும்போது, நம் ஆண்டவரை எவ்வாறு அணுகுகிறீர்கள்? அன்பும் பக்தியும் கொண்டு உங்கள் நாள் முழுவதையும் அவருக்கு ஒப்புக்கொடுப்பதும், உங்கள் நெருங்கிய நண்பரிடம் பேசுவதுபோல் நாள் முழுவதும் அவரிடம் பேசுவதும் நிச்சயமாக நல்லதே. ஆனால் வேறு சில வேளைகளில் நம் செபம் தீவிரமானதாக இருக்க வேண்டும்; அந்தத் தீவிரம் வெளிப்பட வேண்டும். இதற்கான ஒரு வழி, நம் ஆண்டவருக்கு முன்பாக உண்மையிலேயே முகங்குப்புற விழுந்து வணங்குவதாகும். உங்கள் அறையின் அமைதியிலோ, யாருமில்லாத ஓர் ஆலயத்திலோ இவ்வாறு செபிக்க வாய்ப்பைத் தேடுங்கள். இந்தத் “தீவிரம்”, நம் ஆண்டவருக்கு முழுமையாகப் பணிந்திருப்பதன் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அது நீடித்ததாகவும், தன்னையே வெறுமையாக்குவதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செபிப்பது அன்பின் அழகிய செயல்; கடவுளுக்கு உரிய ஆராதனையைச் செலுத்துவதற்கான ஒரு வழியுமாகும். நாம் ஒருபோதும் அவருக்கு நிறைவான ஆராதனையைச் செலுத்த முடியாது என்றாலும், நம்மால் இயன்றவரை முழுமையாக அதைச் செய்ய நாம் எடுக்கும் முயற்சிகள் அவருக்கு உகந்தவையாக இருக்கின்றன; இரக்கம் நிறைந்த தமது இதயத்திற்கு நம்மை நெருக்கமாக ஈர்த்துக்கொள்ளவும் அவை அவருக்கு இடமளிக்கின்றன (காண்க: நாட்குறிப்பு #1279).
நம் ஆண்டவருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து எப்போதாவது செபித்திருக்கிறீர்களா? அப்படிச் செய்திருந்தால், அதைத் தொடர்ந்து செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அவ்வாறு செய்ய ஒரு வாய்ப்பைத் தேடுங்கள். இதுவரை செய்ததில்லை என்றால், தொடங்குவதற்கு இதுவே நல்ல நேரம். என்ன சொல்ல வேண்டும் என்று கவலைப்படாதீர்கள்; தொடக்கத்தில் அது சங்கடமாகத் தோன்றினாலும் கவலைப்படாதீர்கள். முழந்தாளிட்டு, தரைவரை தாழ்ந்து வணங்கி, நம் ஆண்டவர்மீது உங்களுக்குள்ள அன்பை வெளிப்படுத்துங்கள். அப்படியே இருந்து, உங்களை முழுமையாக ஒப்படைக்க முயலுங்கள். ஆண்டவர் உங்கள் ஆராதனையை ஏற்றுக்கொண்டு, இரக்கம் நிறைந்த தமது திருஇதயத்திற்கு உங்களை இன்னும் நெருக்கமாக ஈர்த்துக்கொள்வார்.
ஆண்டவரே, நான் உமக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, உமது மாட்சிக்காக என் வாழ்வு முழுவதையும் தன்னலமற்ற கொடையாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அன்பு ஆண்டவரே, அனைத்தையும் உமக்குத் தருகிறேன்; எதையும் எனக்கென்று வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டுகிறேன். நீரே என் கடவுள்; எனக்கு எல்லாமும் நீரே. நான் உம்மை அன்பு செய்கிறேன்; என் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறேன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
வியாகுல அன்னைக்கு நவநாள் செபம்
மரபுப்படி செப்டம்பர் 7–15 வரை செபிக்கப்படுகிறது
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




