தமிழ்

சிந்தனை 281: அசைக்க முடியாத இறைத்திருவுளம்

பரவசநிலையில் புனித பிலிப்பு நேரி, ஓவியர்: குய்தோ ரேனி

காணொளி

சில வேளைகளில், நாம் இறைவனை ஆழமாக அன்பு செய்யும்போது, அவருக்காகப் பெரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வலுவான உந்துதல்கள் நமக்குள் எழுவதை உணரலாம்.  இருந்தாலும், நமது ஆவலும் உறுதியான தீர்மானமும் இருந்தபோதிலும், நமது பணி முன்னேற இறைவன் அனுமதிக்காததுபோல் தோன்றலாம்.  ஆண்டவர் செயல்பட இன்னும் ஆயத்தமாக இல்லாதது இதற்குக் காரணமாக இருக்கலாம்.  இறைவனுக்காகப் பெரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வலுவான ஆவல் இருப்பது நல்லதுதான்; ஆயினும், நமது ஆவல்கள் இறைத்திருவுளத்தின் நிறைவான ஞானத்திற்கும் அது வகுத்துள்ள மிகச் சரியான காலத்திற்கும் இசைவாக இருக்க வேண்டும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  எது சிறந்தது என்பதை அவரே அறிவார்; தாம் தூண்டிய பணி தாம் விரும்பும் நேரத்தில் கனிதர அவர் அனுமதிப்பார்; அதற்கு முன்பல்ல.  உங்கள் உந்துதல்களை இறைவனிடம் ஒப்படைப்பது, அவர் உங்களைச் செய்ய அழைக்கும் பணியை அவர் தூய்மைப்படுத்த அனுமதிப்பதற்கான ஒரு வழியாகும். இவ்வாறு, இறுதியில் அது நமக்குள் அவர் ஆற்றும் பணியாக இருக்குமே தவிர, எது நல்லது என்பதைப் பற்றிய நமது சொந்தக் கருத்தின்படி நாம் செய்யும் பணியாக இருக்காது.  இறைத்திருவுளம் அசைக்க முடியாதது; உலகிலுள்ள ஏக்கங்களும் ஆசைகளும் அனைத்தும் சேர்ந்தாலும், மிகச் சரியான நேரத்தில் நிறைவேற்ற அவர் வகுத்துள்ள நிறைவான திட்டத்திற்கு மாறாகச் செயல்பட அவரைத் தூண்ட முடியாது.  இறைவன் தாம் விரும்பும் விதத்தில் உங்கள் வழியாக உலகிற்குத் தமது இரக்கத்தை வழங்கி ஆசீர்வதிக்கும்படி, அவர்முன் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள் (காண்க: நாட்குறிப்பு #1389).

நம் ஆண்டவருக்குப் பணிபுரிய வேண்டும் என்ற ஆவலால் உங்கள் இதயம் நிறைந்திருக்கிறதா?  அப்படி இருக்கும் என நம்புகிறேன்.  இந்த ஆவல்களைக் குறித்துச் சிந்தியுங்கள்; அவை நம் ஆண்டவருக்கு உகந்தவை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  ஆனால், அவை நிறைவடைய வேண்டுமென்றால், மிகத் தூய்மையான ஆவல்கூட இறைவனின் திருவுளத்திற்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.  இன்று செப மனத்துடன் அந்தத் தீர்மானத்தை எடுங்கள்; உங்கள் இதயப்பூர்வமான ஆவலைப் பயன்படுத்தி, இறைவன் தமது இரக்கமுள்ள இதயத்தை உலகிற்கு வெளிப்படுத்துவார்.

ஆண்டவரே, என் முழு இதயத்தோடும் உமக்குப் பணிபுரிய நான் உண்மையாகவே விரும்புகிறேன்.  என் விருப்பம் உமது திருவுளத்தில் கரைந்துபோகும்படி, அந்த ஆவலை அதிகரித்துத் தூய்மைப்படுத்தியருளும்.  உமது ஞானத்திற்கும் அன்பிற்கும் நான் பணிந்திருக்கும்போது, எனது “நல்ல” கருத்துகளைக்கூட விட்டுவிட எனக்கு உதவியருளும்.  அன்பு ஆண்டவரே, நான் உம்மை உண்மையாகவே அன்பு செய்கிறேன்; உமது நிறைவான திருவுளத்தின்படி நீர் என்னைப் பயன்படுத்த விரும்புகிறேன்.  இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

பதிவுசெய்துகொள்ளுங்கள் எங்கள் YouTube சேனலில்!
புதிய பதிவுகள் குறித்த அறிவிப்புகளைப் பெறுங்கள்.

அக்டோபர் மாதம் திருச்செபமாலை மாதம்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்