டியேகோ வெலாஸ்கெஸ் வரைந்த கன்னி மரியாவுக்கு முடிசூட்டுதல்
விண்ணகமே நமது இலக்காக இருக்க வேண்டும் என்பது உண்மை. இந்த நிலைவாழ்வு உண்மையின்மீது நாம் எப்போதும் நம் பார்வையைப் பதித்திருக்க வேண்டும். ஏன்? ஏனெனில், கடந்து செல்லும் இவ்வுலகத்தோடு ஒப்பிடுகையில், இறுதியில் முக்கியமானது விண்ணகம் மட்டுமே. ஆகவே, நமது அன்றாடக் கடமைகளில் மெத்தனமாகிவிடாமல் விண்ணகத்தின்மீது நம் கவனத்தை நிலைநிறுத்துவது எப்படி? நாள் முழுவதையும் ஆலயத்தில் செலவிடுவதற்காக நமது அன்றாடக் கடமைகளையும் பொறுப்புகளையும் புறக்கணிப்பது முறையாகுமா? நிச்சயமாக இல்லை. உண்மையில், நமது கடமைகளை நன்கு நிறைவேற்றுவது விண்ணகத்திற்கான பாதையின் மையமான அம்சமாகும். நாம் அவற்றை உண்மைப்பற்றுடனும் அக்கறையுடனும் அன்புடனும் நிறைவேற்ற வேண்டும். இப்பூவுலகில் இருக்கும்போது நன்கு வாழ்வதே விண்ணகத்திற்கான மிகச் சிறந்த தயாரிப்பாகும் (காண்க நாட்குறிப்பு #107).
இன்று விண்ணகத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். மகிமைமிக்க இந்த உண்மையை அதன் உண்மையான தன்மையில் காணுங்கள். அது நிலையான பேரின்பம்! அது முடிவில்லா மகிழ்ச்சி! ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யுமாறு கடவுள் அழைக்கும் அனைத்தையும் நோக்குங்கள். அவை சிறிய எளிய பணிகளாக இருந்தாலும், பெரியதும் பிறர் பார்வைக்குத் தெரிவதுமான செயல்களாக இருந்தாலும், அனைத்தையும் கடவுள்மீதுள்ள அன்பிற்காகச் செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொறுப்பையும் நிலையான மகிழ்ச்சியை நீங்கள் அடைவதற்கான முக்கியமான வழியாகக் காணுங்கள்.
ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் நுழைய உம்மை அழைக்கிறேன். நான் செய்யும் அனைத்தும் உம்மீதும் பிறர்மீதும் கொண்ட அன்பின் செயலாக அமைய வேண்டுமென மன்றாடுகிறேன். என் பொறுப்புகள் அனைத்தையும் நான் நன்கு நிறைவேற்றி, அவற்றின் வழியாக எனக்காகக் காத்திருக்கும் மகிமைமிக்க வாழ்வை அடைவேனாக. இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்.
பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




