படம்: ராபர்ட் ஷெயிப் வழங்கியது, Pixabay
பிறர் நன்றாகச் செயல்படும்போது நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? ஒரு குழந்தை நன்றாகச் செயல்படும்போது பெரும்பாலும் உங்கள் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை எப்படி? பிறர் செய்யும் நன்மையில் மனமார மகிழக்கூடிய திறன், இரக்கமுள்ள இதயத்தின் உறுதியான அடையாளமாகும். பல வேளைகளில் பொறாமையும் அழுக்காறும் இவ்வாறு இரக்கத்தை வெளிப்படுத்துவதற்குத் தடையாகின்றன. ஆனால் மற்றொருவரின் நன்மையில் நாம் மகிழ்ந்து, ஒருவருடைய வாழ்வில் கடவுள் செயலாற்றும்போது அக்களித்தால், அது நமக்கு இரக்கமுள்ள இதயம் இருப்பதற்கான அடையாளமாகும் (காண்க: நாட்குறிப்பு #241).
பாராட்டவும் மதிப்பளிக்கவும் உங்களுக்குக் கடினமாக இருக்கும் ஒருவரைப் பற்றி எண்ணிப் பாருங்கள். யாரைப் பாராட்டி ஊக்குவிப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கிறது? ஏன் இவ்வாறு இருக்கிறது? இதற்குக் காரணமாக நாம் பெரும்பாலும் அவர்களுடைய பாவத்தைச் சுட்டிக்காட்டுகிறோம்; ஆனால் உண்மையான காரணம் நம்முடைய சொந்தப் பாவமே. அது கோபமாகவோ, அழுக்காறாகவோ, பொறாமையாகவோ, செருக்காகவோ இருக்கலாம். ஆனால் அடிப்படையில், பிறருடைய நற்செயல்களில் மகிழும் மனப்பாங்கை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்விதமாக அன்பு செய்வதற்கு உங்களுக்குக் கடினமாக இருக்கும் ஒருவரையாவது எண்ணிப் பார்த்து, இன்று அவருக்காகச் செபியுங்கள். நம் ஆண்டவர் பிறர் வழியாகச் செயலாற்றும்போது நீங்கள் மகிழும்படி, உங்களுக்கு இரக்கமுள்ள இதயத்தைத் தருமாறு அவரிடம் கேளுங்கள்.
ஆண்டவரே, பிறரில் உமது உடனிருப்பைக் காண எனக்கு உதவியருளும். செருக்கு, பொறாமை, அழுக்காறு அனைத்தையும் விட்டுவிட்டு, உமது இரக்கமுள்ள இதயத்தோடு அன்பு செய்ய எனக்கு உதவியருளும். பிறருடைய வாழ்வின் வழியாகப் பல விதங்களில் நீர் செயலாற்றுவதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். மிகப் பெரிய பாவிகளிடம்கூட நீர் செயலாற்றுவதைக் காண எனக்கு உதவியருளும். உமது உடனிருப்பை நான் கண்டுணரும்போது, உண்மையான நன்றியுணர்வாக வெளிப்படும் மகிழ்ச்சியால் என்னை நிரப்பியருளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பதினேழாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்
மார்ச் 9 – உரோமை நகர்ப் புனித பிரான்செஸ்கா, துறவியார்
தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




