இயேசு மரியா, needpix.com வழியாக
“அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபித்திருந்தால், இவ்வுலகில் உங்கள் இறுதி வேளைக்காகவும் செபித்திருக்கிறீர்கள்: “இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.” மரணம் பலருக்கு அச்சமூட்டுகிறது; நமது இறப்பின் வேளையைப் பற்றி நாம் பொதுவாகச் சிந்திக்க விரும்புவதில்லை. ஆனால் “நமது இறப்பின் வேளை” என்பது நாம் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆவலோடும் எதிர்நோக்க வேண்டிய ஒரு தருணம். நமது ஆன்மாவில் கடவுளோடு சமாதானமாக இருந்தால் மட்டுமே நாம் அதை அவ்வாறு எதிர்நோக்குவோம். நாம் தவறாமல் பாவசங்கீர்த்தனம் செய்து, வாழ்நாள் முழுவதும் கடவுளின் பிரசன்னத்தை நாடி வந்திருந்தால், நமது இறுதி வேளை துன்பமும் வலியும் கலந்ததாக இருந்தாலும், மிகுந்த ஆறுதலும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும் (காண்க நாட்குறிப்பு #321).
அந்த வேளையைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த வேளைக்குப் பல மாதங்களுக்கு முன்பே தயாராகும் அருளைக் கடவுள் உங்களுக்கு அளித்தால், நீங்கள் எவ்வாறு தயாராவீர்கள்? உங்கள் இறுதிப் பயணத்திற்குத் தயாராக இருக்க, வழக்கத்திலிருந்து மாறுபட்டு என்ன செய்வீர்கள்? உங்கள் மனதில் தோன்றுவது எதுவாயினும், பெரும்பாலும் அதுவே இன்று நீங்கள் செய்ய வேண்டியதாக இருக்கும். மரணத்திலிருந்து புதிய வாழ்வுக்குக் கடந்து செல்வதற்கு உங்கள் இதயத்தைத் தயாரிக்க, அந்த நேரம் நெருங்கும்வரை காத்திருக்காதீர்கள். அந்த “வேளையை” மிகப்பெரும் அருளின் வேளையாகப் பாருங்கள். அதற்காகச் செபியுங்கள்; அதை எதிர்நோக்கியிருங்கள்; ஒருநாள் உங்கள் மண்ணுலக வாழ்வின் மகிமையான நிறைவில், கடவுள் உங்கள்மீது பொழிய விரும்பும் இரக்கத்தின் பெருக்கைப் பெற விழிப்பாயிருங்கள்.
ஆண்டவரே, மரணத்தைப் பற்றிய எல்லா அச்சங்களிலிருந்தும் விடுபட எனக்கு உதவியருளும். இந்த உலகம் மறுவுலக வாழ்வுக்கான தயாரிப்பு மட்டுமே என்பதை எப்போதும் நினைவில் கொள்ள எனக்கு உதவியருளும். அந்தத் தருணத்தின்மீது என் பார்வையைப் பதித்து, நீர் பொழியவிருக்கும் இரக்கத்தின் பெருக்கை எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்க எனக்கு உதவியருளும். அன்னை மரியே, எனக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இருபத்தெட்டாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாட்கள் & சிலுவையடியில் 40 நாட்கள்
தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




