வண்ணக் கண்ணாடியில் சிலுவையில் அறையப்படும் காட்சி, Needpix.com வழியாக
அன்னை மரியா தம் வாழ்வில் எவ்வளவோ துன்பங்களைத் தாங்கிக்கொண்டார். தம் மீட்பரை அற்புதமாகக் கருத்தரித்தபோது, பிறரது சந்தேகங்களையும் ஏளனத்தையும் தாங்கிக்கொண்டார். தம் இறைமகன் புறக்கணிக்கப்பட்டதையும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதையும் நிறைவான தாயன்புடன் கண்டார். அவரது மரண வேதனையிலும் இறப்பிலும் அவருக்குத் துணை நின்றார். இவை அனைத்தின் ஊடாகவும் அவரது தாயன்பு நிறைவானதாகவும் வலிமைமிக்கதாகவும் விளங்கியது. நாமும் வாழ்வில் தாங்கிக்கொள்ளும் அனைத்திலும் அவர் நமக்குத் துணை நிற்கிறார். தமது கனிவான இதயத்தின் வழியாக அன்புக்கும் பரிவுக்கும் நிறைவான சாட்சியாக நமக்கு விளங்குகிறார் (காண்க: நாட்குறிப்பு #315).
இன்று இறைவனின் அன்னையின் இதயத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். இயேசுவின் உண்மையான தாயாகிய உங்கள் பேறுபெற்ற அன்னை, தம் மகனின் வாழ்நாள் முழுவதும் அவரை அன்புசெய்ததைப் பற்றிச் சிந்தியுங்கள். எண்ணற்ற முறை அவரது இதயத்தை ஊடுருவிய துயர வாளை மனக்கண்ணில் காணுங்கள். தம் மகனையும், அவரை அவ்வளவு கொடூரமாக நடத்தியவர்களையும் அன்னை எத்தகைய நிறைவான, கனிவான அன்புடன் நேசித்தார் என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். அவரது அன்பைப் பின்பற்ற இன்று அவரது வேண்டுதல்களை நாடுங்கள்; அந்த அன்பை உங்கள்மீது பொழியுமாறு அவரிடம் கேளுங்கள். அவர் உங்களைக் கைவிடமாட்டார்.
மிகவும் அன்பான அன்னையே, என் அரசியே, எனக்காக வேண்டிக்கொள்ளும்; உமது தாயன்பின் அக்கறையை நான் அறிந்துகொள்ள உதவியருளும். உமது தூய இதயத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் இரக்கத்தை நான் நிறைவாகப் பெற்றுக்கொள்ளும்படி, அனைத்திலும் உம்மை நாட எனக்கு உதவியருளும். உமது தயவையும் கனிவையும் பின்பற்றவும், தேவையில் இருப்போர் அனைவருக்கும் துணை நிற்கவும் எனக்கு அருள்தாரும். அன்னை மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இருபத்தேழாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்
தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




