தமிழ்

சிந்தனை 123: அவமானங்கள் தரும் ஆசீர்வாதம்

கேலி செய்யப்படும் கிறிஸ்து (முள்முடி சூட்டப்படுதல்) வரைந்தவர்: பியெத்ரோ தெல்லா வெக்கியா

காணொளி

தெளிந்த மனநிலையில் இருக்கும் எவர்தான் அவமானப்பட விரும்புவார்?  நீங்கள் அவமானப்படுத்தப்பட்டால் என்ன செய்வீர்கள்?  பெரும்பாலானோர் அவமானத்தைத் தவிர்க்க வழிகளைத் தேடத் தூண்டப்படுவார்கள். அதன் விளைவாகச் சிலர் ஆழ்ந்த மனக்காயம் அடைவார்கள்.  மற்றவர்கள் கோபமடைந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முனைவார்கள்.  ஒருவருக்கு ஏற்படும் அவமானத்திற்கான காரணம் நியாயமற்றதாக இருந்தாலும், அவமானங்கள் கடவுளின் அருள் மற்றும் இரக்கத்தின் மிக ஆழமான நிலைகளுக்குள் நுழைவதற்கான அழைப்பாக மாறக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.  அவமானத்தைச் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளும்போது, அது தாழ்ச்சியை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.  கோபமும் மனக்காயமும் ஏற்படக்கூடும் என்றாலும், தாழ்ச்சியே நமது இலக்காக இருக்க வேண்டும்.  நம்மிடம் எழும் செருக்கு, கோபம், மனக்காயம் ஆகிய அனைத்தையும் களைந்து, தாழ்ச்சியின் ஆழத்திற்குள் நுழைய நம்மையே அனுமதிப்பதுதான் மிகவும் முக்கியம்.  இன்றியமையாத இந்தப் பண்பு, கடவுளை மட்டுமே சார்ந்திருக்கவும், அவரிடமிருந்து மட்டுமே ஆறுதலையும் அமைதியையும் நாடவும், அவரும் அவரது திருவுளமும் மட்டுமே நம் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஒரே ஊற்றாக இருக்க அனுமதிக்கவும் நமக்கு உதவும்.  அவமானங்களிலிருந்து பிறக்கும் தாழ்ச்சியைவிட ஆன்மாவுக்கு நன்மை தருவது வேறெதுவும் இருக்க முடியாது (காண்க நாட்குறிப்பு #593).

உங்களை மிகவும் தாழ்த்துவது எது?  உங்கள் செருக்கைக் காயப்படுத்தி, உங்களைக் கோபமடையவோ தற்காத்துக்கொள்ளவோ தூண்டுவது எது?  எதை நினைத்து நீங்கள் மனம் குமுறிக்கொண்டு, அதைப் பற்றியே இடைவிடாமல் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்?  ஏதேனும் ஒன்று உங்கள் நினைவுக்கு வந்தால், அதையே ஆண்டவர் தமது அருள் மற்றும் இரக்கத்தின் ஊற்றாக மாற்ற விரும்பக்கூடும்.  பாவம், அநீதி, மனக்காயம் என எதுவாக இருந்தாலும், அனைத்தையும் நம் ஆண்டவரால் அருளாக மாற்ற முடியும்.  உண்மையிலேயே அவர் அவ்வளவு வல்லமையுள்ளவர்.  உங்கள் செருக்கை மிக அதிகமாகக் காயப்படுத்துவது எது என்பதை அடையாளம் கண்டு, ஆண்டவர் அதை அருளின் ஊற்றாக மாற்ற அனுமதித்து, அதைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க முயலுங்கள்.

ஆண்டவரே, என் செருக்கு எத்தனையோ முறை காயப்படுகிறது.  என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அனுபவங்கள் என் வாழ்வில் எத்தனையோ உள்ளன.  என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அவை அனைத்தும் உம்மாலும் உமது அருளாலும் மாற்றம் பெற நான் அனுமதிக்க எனக்கு உதவும்; அவை இனி எனக்கு மனக்காயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி என்னை அழுத்தும் சுமையாக இராதிருக்கட்டும்.  அன்பு ஆண்டவரே, இந்த அவமானங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றின் வழியாக என் இதயத்தை மாற்றியருளும்; இதனால், என் தாழ்ச்சியில் உம்மை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ளவும், உம்மிடம் இன்னும் முழுமையாகச் சரணடையவும் எனக்கு அருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மே 3 – திருத்தூதர்களான புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு
இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், திருவழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை

பாஸ்கா காலச் செபங்கள்

பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்