தமிழ்

சிந்தனை 177:  புனிதமான கீழ்ப்படிதல்

நேர்த்திக்கடன், ஓவியர் பிலிப் தெ ஷாம்பெய்ன்

காணொளி

கடவுளின் திருவுளத்திற்குப் பதிலாக நமது சொந்த விருப்பத்தின்படி செயல்படுவதிலிருந்து நம்மைக் காக்கும் மிகச் சிறந்த பாதுகாப்புகளில் ஒன்று புனிதமான கீழ்ப்படிதல். துறவற வாழ்வில் இருப்பவர்கள் இதை நேரடியாகவும் வெளிப்படையாகவும் வாழும் பேறு பெற்றவர்கள். வெளிப்புறமான இந்த நடைமுறை தங்கள் உள்ளத்திலும் வேரூன்ற அனுமதிப்பதன் வழியாக, தாங்கள் கடவுளின் திருவுளத்தின்படி வாழ்வதை உறுதியாக அறிந்துகொள்கிறார்கள். ஆனால் கீழ்ப்படிதல் என்பது துறவற வாழ்வில் மட்டுமல்ல, ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கீழ்ப்படிதல் பல வழிகளில் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வாழ்வில், அன்பையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்காக ஒருவகையான கீழ்ப்படிதலுடன் நம்மைப் பணிவுபடுத்தி, பிறருடைய விருப்பங்களுக்கு நமது விருப்பத்தை உட்படுத்தும்போது அது செயல்படுத்தப்படுகிறது. நமது திருஅவையின் குரலுக்கும் போதனைக்கும் நமது விருப்பத்தை உட்படுத்தும்போது அது ஆழமான முறையில் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டவர் தமது திருஅவையின் வழியாகச் சொல்வதற்குப் புனிதமான கீழ்ப்படிதலுடன் வாழ்ந்தால், நாம் ஒருபோதும் தவறான வழியில் செல்லமாட்டோம். இந்தக் கீழ்ப்படிதலை நாம் வாழும்போது, கடவுளின் திருவுளம் வெளியிலிருந்து நம்மீது திணிக்கப்படாது; மாறாக, முதலில் அவர் நம் இதயத்தில் பேசுவதைக் கேட்போம்; பின்னர் அது வெளிப்புறமாக உறுதிப்படுத்தப்படும் (காண்க நாட்குறிப்பு #932-933).

பிறருடைய விருப்பத்திற்குப் பணிந்துபோகும்படி கடவுள் உங்களை மென்மையாகவும் மறைமுகமாகவும் அழைப்பதை நீங்கள் கேட்கிறீர்களா? கடவுளின் திருவுளத்திற்கு முரணானவற்றிற்கு நீங்கள் பணியக்கூடாது. ஆனால், உங்களையே மறுத்து, பிறருடைய விருப்பத்தைக் “கீழ்ப்படிதலுடன்” ஏற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் பல வாய்ப்புகள் உள்ளன. கடவுள் தமது திருஅவையின் வழியாக வெளிப்படுத்தும் திருவுளத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் எப்போதும் இவ்வாறு செய்ய முடிந்தால், இரக்கத்தின் வாயில்கள் திறக்கப்படுவதைக் காண்பீர்கள்; உங்கள் தாழ்மையான பணிவு உங்களை மிகுந்த புனிதத்திற்கு இட்டுச் செல்லும்.

ஆண்டவரே, என் சொந்த விருப்பத்தை விட்டுவிட்டுப் பிறருடைய விருப்பத்தை ஏற்றுக்கொள்வது சில வேளைகளில் மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தச் சிறிய செயல்களை உண்மையான அன்பின் செயல்களாகவும், உமக்குப் புனிதமான பணிவுடன் அடிபணியும் செயல்களாகவும் காண எனக்கு உதவியருளும். நான் புனிதமான கீழ்ப்படிதலுடன் செயல்படும்போது, குறிப்பாக அதற்குப் பெரும் தியாகம் தேவைப்படும்போது, என் விருப்பத்தை உமது திருவுளத்திற்கேற்ப நீர் வடிவமைக்க நான் இடமளிப்பேனாக. உமது திருஅவையின் வழியாக வெளிப்படுத்தப்படும் உமது திருவுளத்தையும் நான் தேர்ந்துகொள்கிறேன்; என் சொந்தக் கருத்துகளைவிட அந்த வெளிப்பாட்டிற்கே எப்போதும் பணிகிறேன். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூன் 26 – புனித ஹோசேமரியா எஸ்கிரிவா, அருள்பணியாளர்–விருப்ப நினைவு
(பல்வேறு திருஅவை மாகாணங்களில்)

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்