தமிழ்

சிந்தனை 218: கடவுளை ஒரே ஒருமுறை உணர்ந்தறிதல்

கிறிஸ்துவும் செல்வந்தரான இளம் தலைவரும், ஓவியர்: ஹைன்ரிக் ஹோஃப்மான்

காணொளி

கடவுளையும் அவரது வழிகளையும் புரிந்துகொள்வது முக்கியம். ஆனால், புரிந்துகொள்வது என்பது அறிந்துகொள்வதற்கு இணையானதல்ல. கடவுளை அறிந்துகொள்வது என்பது ஓர் ஆளாகிய அவரை நாம் சந்திப்பதாகும். அவர் சொல்வதைப் புரிந்துகொள்வதோடு மட்டும் நாம் நின்றுவிடுவதில்லை; மாறாக, அவருடன் உரையாடுகிறோம், அவரைச் சந்திக்கிறோம், அனுபவிக்கிறோம், அவருடன் ஓர் உறவுக்குள் நுழைகிறோம். உண்மையில், கடவுளை ஒரே ஒருமுறையாவது உணர்ந்தறிவது, இவ்வாழ்வில் நாம் பெறக்கூடிய மிகப் பெரும் ஆசிகளுள் ஒன்றாகும். அவரை ஒரே ஒருமுறை உணர்ந்தறிவதும், அவருடன் நிகழும் ஒரே ஒரு சந்திப்பும், அவரை ஒரே ஒருமுறை அறிந்துகொள்வதும்கூட நம் வாழ்வை என்றென்றைக்கும் மாற்றப் போதுமானவை. கடவுளை உண்மையாக அறிந்துகொள்வது, வாழ்வில் நாம் செய்யக்கூடிய வேறு எந்தச் செயலையும்விட முக்கியமானது (காண்க நாட்குறிப்பு #1133).

உலகின் செல்வமும் புகழும், பெரும் வெற்றியும் மதிப்பும் உங்களுக்குக் கொடுக்கப்பட்டால், அவற்றை ஏற்றுக்கொள்வீர்களா? பெரும்பாலும் ஏற்றுக்கொள்வீர்கள். வெற்றி பெறுவதும், செல்வந்தராக இருப்பதும், புகழ்பெறுவதும், பெரிதும் மதிக்கப்படுவதும் பெரும்பாலும் விரும்பத்தக்கவையாகவே இருக்கின்றன. இவை எதுவும் தம்மில்தாமே தீயவை அல்ல. ஆனால், கடவுளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நமது ஆவலைவிட இந்த ஆசைகள் நமக்கு முக்கியமானவையாக மாறி, அந்த இறுதி இலக்கிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் வேளையில், இவற்றில் பெரும் ஆபத்து உண்டு. கடவுளையே நாடும் ஆவலைவிட உலகப் பொருள்களை அதிகமாக நாம் விரும்பத் தொடங்கும் வேளையிலேயே, வாழ்வில் எதற்கு முதலிடம் தர வேண்டும் என்பதில் நாம் குழம்பிவிட்டோம் என்பது தெளிவாகிறது. இரக்கமுள்ள நம் கடவுளை ஒரே ஒருமுறையாவது சந்திக்க நாடுங்கள்; அவரை இவ்வாறு அறிந்துகொள்வது, இந்த உலகம் தரக்கூடிய அனைத்தையும்விட மேலானது என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

என் ஆண்டவரே, உம்மை அறிந்துகொள்ள நான் ஆவல்கொள்கிறேன். என் வாழ்விலுள்ள மற்ற எல்லா ஆசைகளையும்விட இந்த ஆவல் வலிமைமிக்கதாக இருக்கும்படி, இதை என் ஆன்மாவில் பெருகச் செய்யும். அன்பு ஆண்டவரே, உம்மை ஒரே ஒருமுறையாவது உணர்ந்தறியவும், ஒரே ஒருமுறையாவது அறிந்துகொள்ளவும் எனக்கு அருள வேண்டுகிறேன்; இவ்வாறு உம்மை அறிந்துகொள்வதன் வழியாக என் வாழ்வை மாற்றியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஆகஸ்ட் 6  – ஆண்டவரின் தோற்றமாற்ற விழா

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்