தமிழ்

சிந்தனை 264: இயேசுவுடன் ஒரு தியானம்

Okkisafire, CC BY-SA 4.0, Wikimedia Commons வழியாக

காணொளி

நீங்கள் எப்போதாவது தியானத்தில் பங்கேற்றிருக்கிறீர்களா?  வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விலகி, நம் ஆண்டவருக்குச் செவிமடுக்கவும் அவரது இரக்கமுள்ள திருமுன்னிலையில் இருக்கவும் நீண்ட நேரம் செலவிடும் பேறு சிலருக்குக் கிடைக்கிறது.  மற்றவர்களுக்கோ இத்தகைய தியானத்தில் பங்கேற்க ஒரு நாள்கூட ஒதுக்குவது கடினமாக இருக்கிறது.  இந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருந்தாலும் கிடைக்காவிட்டாலும், இயேசுவுடன் தனிமையில் நேரம் செலவிடுவது உங்களுக்குத் தேவை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  உங்கள் பரபரப்பான நாளில் அவருடன் பேசுவதை மட்டுமே கொண்டு, அவருடன் முறையான உறவைப் பேணுவது இயலாது.  இயேசு விரும்பும் ஆழமான உறவுக்கு, அவருக்காக மட்டுமே ஒதுக்கப்படும் நேரம் தேவை.  இத்தகைய வாய்ப்புகளைத் தேடுங்கள்; அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.  நீண்ட நேரம் இறைவேண்டலிலும் சிந்தனையிலும் செலவிடும் தருணங்களில்தான் வாழ்க்கை தெளிவு பெறுகிறது; கடவுளின் திருவுளமும் வெளிப்படுகிறது (காண்க நாட்குறிப்பு #1326-1327).

நம் ஆண்டவருடன் தனிமையில் நீண்ட நேரம் செலவிட்டது கடைசியாக எப்போது?  ஒருவேளை அது சிற்றாலயத்திலோ உங்கள் அறையிலோ ஒரு மணி நேரமாக மட்டுமே இருந்திருக்கலாம்; அல்லது அதைவிட நீண்ட நேரமாக இருந்திருக்கலாம்.  அவருக்கு நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.  திரைப்படம் பார்க்கவும், கடைகளுக்குச் செல்லவும், வேறு ஏதேனும் பொழுதுபோக்கில் ஈடுபடவும் நம்மால் பெரும்பாலும் நிறைய நேரம் ஒதுக்க முடிகிறது.  உண்மை என்னவென்றால், நம் ஆண்டவருடன் தனிமையில் நேரம் செலவிடுவதற்கு வாழ்வில் முன்னுரிமை கொடுத்தால், அது நிச்சயம் நிகழும்.  அதற்கான நேரத்தை நாம் கண்டுகொள்வோம்; அவருடன் செலவிடும் நேரமும் மிகுந்த பலனைத் தரும்.  நம் ஆண்டவருடன் அமைதியாகச் சிந்திக்கும் இத்தகைய தருணங்களுக்கு நீங்கள் எந்த அளவு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவற்றை உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக ஆக்க மீண்டும் உங்களை அர்ப்பணியுங்கள்.  நீங்கள் அவ்வாறு செய்தால், அவரது இரக்கம் பொழியப்படும்போது மற்ற அனைத்தும் உரிய முறையில் அமைந்துவிடும்.

ஆண்டவரே, என் வாழ்வில் உமக்கே முதலிடம் கொடுக்க விரும்புகிறேன்.  ஒவ்வொரு நாளும் உமக்காக நேரம் ஒதுக்கவும், தவறாமல் நீண்ட நேரம் உம்முடன் செலவிடவும் விரும்புகிறேன்.  உமது திருமுன்னிலையில் மகிழ்ந்திருந்து, என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் சிக்கல்களை நீர் சீர்செய்ய இடமளிக்கும்படி, இதைச் செய்வதற்கான மனஉறுதியை எனக்குத் தாரும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

செப்டம்பர் 21 – திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் விழா

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்