தமிழ்

சிந்தனை 263: புயலில் உங்கள் சுக்கானை இயக்கும் கடவுள்

கலிலேயக் கடலில் புயலின் நடுவே கிறிஸ்து, லுடோல்ஃப் பாக்ஹுய்சன் வரைந்த ஓவியம்

காணொளி

நீங்கள் ஒரு சிறு குழந்தையாக, நடுக்கடலில் ஒரு சிறிய படகில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  புயல் வீசத் தொடங்குகிறது; எந்தத் திசையிலும் உங்களுக்குக் கரை தெரியவில்லை.  அலைகள் மோதும் ஒவ்வொரு முறையும் படகின் முன்பகுதியை மூழ்கடிக்கின்றன; அவற்றால் அலைக்கழிக்கப்படும் நீங்கள், எப்படிப் பிழைக்கப்போகிறீர்கள் என்று எண்ணுகிறீர்கள்.  இப்போது உங்கள் அப்பாவும் உங்களுடன் படகில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  உங்களை உட்கார்ந்து கெட்டியாகப் பிடித்துக்கொள்ளச் சொல்கிறார்; எல்லாம் நன்றாக முடியும் என்றும் கூறுகிறார்.  அவர் நம்பிக்கையோடு நிலைமையைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்; அச்சத்தின் அறிகுறியே அவரிடம் இல்லை.  உங்கள் தந்தை வெளிப்படுத்தும் உறுதி உங்களை அமைதிப்படுத்துகிறது; அவர் உங்களைப் பாதுகாப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.  இது நம் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓர் உருவகம்.  நெருக்கடியை நாம் எதிர்கொள்ளும்போது, புயல் வீசும் கடலின் நடுவே நம் இரக்கமுள்ள ஆண்டவரின் துணை தேவைப்படும் ஒரு குழந்தையாகவே நாம் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.  ஒரு குழந்தை படகைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள முயல்வது அறிவீனமாக இருக்கும்.  நம் வாழ்க்கையை நாமே வழிநடத்த முயல்வதும் அறிவீனமாகவே இருக்கும்.  நம் இதயங்கள் அமைதியடைய, இயேசுவின் அசைக்க முடியாத உறுதி நமக்குத் தேவை.  அலைகள் எழத் தொடங்கும்போதெல்லாம், உங்கள் சுக்கானை இயக்குபவராக ஆண்டவரே இருக்க வேண்டும்.  வாழ்க்கையில் எல்லாவற்றையும் கையாளும் அவரது ஆற்றலைச் சந்தேகிக்காதீர்கள் (காண்க: நாட்குறிப்பு #1322).

வாழ்க்கையில் புயல்கள் வீசத் தொடங்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?  பதற்றமடைகிறீர்களா?  எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, நீங்களே சமாளிக்க முயல்கிறீர்களா?  அல்லது நம் ஆண்டவரின் வல்லமையையும் உறுதியையும் நோக்கி உங்கள் பார்வையைத் திருப்பி, அந்தச் சூழலை அவர் தம் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறீர்களா?  இயேசுவை நோக்கித் திரும்புவது என்பது வெறுமனே எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருப்பதல்ல.  மாறாக, முழுமையாக உங்களையே ஒப்படைத்து அவரை நோக்கித் திரும்புவது மிக ஆழ்ந்த நம்பிக்கையின் செயல்.  எல்லாமே குழப்பமாகவும் தாங்க முடியாததாகவும் தோன்றும்போது, அந்த நம்பிக்கை அவரது அமைதிக்குக் கதவைத் திறக்கிறது; எது உங்களை எதிர்கொண்டாலும் உங்களைப் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வைத்திருக்கிறது.  வாழ்க்கையின் சிரமங்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்; புயலின் வழியாக உங்கள் வாழ்க்கையை வழிநடத்த, சுக்கானை இயக்கும் இறைவனை நோக்கித் திரும்ப மனமறிந்து முடிவெடுங்கள்.

ஆண்டவரே, நம்பிக்கையோடு உம்மை நோக்கித் திரும்புகிறேன்; என் முழு நம்பிக்கையையும் உம்மீது வைக்க முடிவெடுக்கிறேன்.  உம்மால் எல்லாவற்றையும் கையாள முடியும் என்பதையும், உமது அன்பும் அக்கறையும் என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதையும் அறிவேன்.  அன்பு ஆண்டவரே, உம்மீது எனக்குள்ள நம்பிக்கையை வளர்த்தருளும்; என் இதயம் எப்போதும் அமைதியில் நிலைத்திருக்க உதவியருளும்.  இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்