அருளாளர் அலோன்சோ ரொட்ரிக்ஸ் கண்ட காட்சி, பிரான்சிஸ்கோ தெ சுர்பரான் வரைந்த ஓவியம்
உங்களையும் கடவுளையும் தவிர வேறு யாராலும் உங்கள் இதயத்தைக் காண முடியாது. உங்கள் அகவாழ்வின் ஒவ்வொரு விவரத்தையும் கடவுள் முழுமையாக அறிந்திருக்கிறார்; நீங்களோ உங்கள் அகவாழ்வின் விவரங்களை முழுமையற்ற விதத்திலேயே காண்கிறீர்கள். இருப்பினும், உங்கள் அகவாழ்வின் உண்மை நிலையை மேலும் மேலும் உணர்ந்துகொள்வது முக்கியம். இறை இரக்கம் குடிகொண்டிருக்கும் மறைவான, இரகசியமான ஓர் உலகமாக உங்கள் ஆன்மாவைக் காணுங்கள். உங்கள் இதயத்தின் உள்ளறைகள் இறையன்பால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட அனுமதியுங்கள். கடவுளின் இந்தப் புனிதமான, தூய அன்பு உங்களுக்குள் உள்ள அனைத்தையும் வழிநடத்த வேண்டும். உங்களுக்குள் நிகழ்வதை மற்றவர்கள் காண முடியாவிட்டாலும், உங்கள் வாழ்விலிருந்து வெளிப்படும் நற்கனிகளை அவர்கள் காண்பார்கள். இந்த நற்கனிகள், உங்களுக்குள் உயிரோட்டமுடன் இருக்கும் இறை இரக்கத்திற்கு வெளிப்படையான சாட்சியாக அமையும். அகவாழ்வு மறைவாக இருந்தாலும், அது வெளிப்பட வேண்டும். அப்போதுதான் கடவுளின் மறைவான செயல்கள், கண்ணுக்குப் புலப்படும் ஒளிமிக்க விதத்தில் இரக்கத்தை விளைவிக்கும் (காண்க: நாட்குறிப்பு #1363).
உங்கள் ஆன்மாவிற்குள் கடவுள் வல்லமையுடன் செயலாற்றுவதை நீங்கள் உணர்கிறீர்களா? உங்கள் அகவாழ்வின் இந்த மறைவான திருத்தலத்திற்குள் உங்களை வழிநடத்தும் அவரது இரக்கமுள்ள கரத்தை நீங்கள் கவனிக்கிறீர்களா? உங்கள் அகப்பார்வையைக் கடவுளின் தூய அன்பின்மீது நிலைநிறுத்தி, இந்த மறைவான இடம் ஏராளமான நற்கனிகளைத் தர அனுமதியுங்கள். உங்கள் வாழ்வில் நற்கனிகள் உருவாகும்போது, அவை உலகிற்குப் புலப்பட அனுமதியுங்கள். அப்போது, உங்களிடமிருந்து வெளிப்படும் இறை இரக்கத்தைக் கண்டு உலகம் ஊக்கம் பெற்று மாற்றமடையும். உங்கள் அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் இடையிலான இந்த நேரடித் தொடர்பை இன்று சிந்தித்து, உங்கள் இதயம் ஒளிவீச அனுமதியுங்கள்.
ஆண்டவரே, பற்றியெரியும் அன்புடன் உம்மை நேசிக்கிறேன். உமது அருள் என் ஆன்மாவிற்குள் உயிரோட்டமுடன் செயல்படுமாறு, என் இதயத்தைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தியருளும். என் வாழ்வில் உமது அருளின் அற்புதங்களை நீர் நிகழ்த்தும்போது, என் வெளிப்புறச் செயல்களில் இரக்கத்தின் நற்கனி விளையச் செய்தருளும். இவ்வாறு, என் இதயத்தில் உயிரோட்டமுடன் இருக்கும் தூய அன்பிற்கு உமது செயல்கள் அனைவரும் காணும் சாட்சியாக அமையட்டும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
சிறுமலரான லிசியே நகரின் புனித தெரேசாவுக்கு நவநாள் செபம்
எட்டாம் நாள்- செப்டம்பர் 29
இன்றைய திருவிழா– புனித அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




