படம்: கசுன் சாமரா — Pixabay தளத்தில்
நீங்கள் சிறையில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? அல்லது, இளம் வயதிலேயே அடைபட்ட துறவற மடத்தில் நுழைந்து, வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாழ அழைக்கப்பட்டால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு நாளும் உங்கள் குடும்பத்துக்கு உணவளிக்கக்கூடப் போதுமான வசதியின்றி, கடும் வறுமையில் வாழ்ந்தாலும் உங்களால் மகிழ்ச்சியைக் கண்டடைய முடியுமா? இதற்கான பதில் “ஆம்.” வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் உங்களால் நிச்சயமாக மகிழ்ச்சியைக் கண்டடைய முடியும். எப்படி? நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வாழ்வின் வெளிப்புறச் சூழ்நிலைகளை மகிழ்ச்சி சார்ந்திருப்பதில்லை. செல்வத்தையோ, உடலளவிலான சுதந்திரத்தையோ, வாழ்வுக்கான அழைப்புகளையோகூட அது சார்ந்திருப்பதில்லை. நமது வாழ்வுக்கான அழைப்போ வாழ்க்கைச் சூழ்நிலைகளோ எதுவாக இருந்தாலும், நம் தெய்வீக ஆண்டவரோடு நாம் நெருக்கமாக ஒன்றித்திருப்பதில் மட்டுமே மகிழ்ச்சி உள்ளது. நீங்கள் கடவுளை அன்பு செய்கிறீர்களா, இல்லையா என்பதே கேள்வி (பார்க்க: நாட்குறிப்பு #201).
நம் தெய்வீக ஆண்டவரோடு உங்களுக்குள்ள உள்ளார்ந்த உறவைச் சிந்தித்துப் பாருங்கள். அவரை உண்மையாகவும் தனிப்பட்ட முறையிலும் அறிந்து அன்பு செய்கிறீர்களா? நாள்தோறும் அவரோடு உரையாடி, உங்கள் நாளை அவரது பிரசன்னத்தில் செலவிடுகிறீர்களா? உங்கள் இறைவேண்டல் வாழ்வு உயிரோட்டத்துடன் செழித்து வளர்கிறதா? உங்கள் இதயம் பற்றி எரியும் அன்பால் பொங்கி வழிகிறதா? கடவுள் உங்களை நிறைவாக அன்பு செய்கிறார். நீங்களும் அவரை அன்பு செய்யுங்கள்; அப்போது உங்கள் வாழ்வின் மகிழ்ச்சிக்கான ஊற்றைக் கண்டடைவீர்கள்.
என் அன்பு ஆண்டவரே, பற்றி எரியும் அன்போடு உம்மை அன்பு செய்ய எனக்கு உதவியருளும். மிகவும் நெருக்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் உம்மை அறிய எனக்கு உதவியருளும். என் மகிழ்ச்சி, உம்மீது நான் கொண்டுள்ள அன்பை மட்டுமே சார்ந்துள்ளது என்பதை அறிவேன். எல்லாவற்றிலும் நான் உம்மோடு ஒன்றித்திருக்கும்படி, என் இதயத்தில் அந்த அன்பு நாள்தோறும் பெருகுவதாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பதினொன்றாம் நாள் தியானங்கள்:
பாலைவனத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்





