படம்: needpix.com வழியாக
கடந்த மாதத்தில் உங்கள் செப வாழ்வில் இடம்பெற்றவற்றை ஆராய்ந்து பார்த்தால், எவற்றைக் காண்பீர்கள்? சரணடைதல், பரிந்துரை மன்றாட்டு, புகழ்ச்சி, ஆராதனை ஆகியவற்றுக்கான பல தருணங்கள் இருந்திருக்கும் என நம்பலாம். மேலும், உங்கள் செபம் கடவுளுக்கு ஆழ்ந்த நன்றி செலுத்துவதாக அமைந்த பல தருணங்களும் இருந்திருக்கும் என நம்பலாம். நன்றியுள்ளவர்களாக, உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருப்பதும், அந்த நன்றியுணர்வைச் செபத்தில் வெளிப்படுத்துவதும் வல்லமை மிக்கவை. நாம் நன்றி செலுத்துவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. இருந்தும், கடவுள் நமக்கு வழங்கியுள்ள எண்ணற்ற ஆசிகளைவிட நமது பிரச்சினைகளின்மீதே அடிக்கடி அதிகக் கவனம் செலுத்துகிறோம். வாழ்வின் மிக இருண்ட வேளையிலும்கூட, நன்றி செலுத்துவதற்கான பல காரணங்களை ஒரு புனித ஆன்மாவால் கண்டுகொள்ள முடியும். மிகுந்த உள்ளார்ந்த உண்மையுடன் கடவுளுக்கு நன்றிச் செபங்களை ஏறெடுப்பது, நம் உள்ளங்களை உண்மையான ஆன்மிக மகிழ்ச்சியின் உச்சத்திற்கு உயர்த்த வல்லது (காண்க நாட்குறிப்பு #675).
எவற்றுக்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? இன்னும் தெளிவாகச் சொல்வதானால், கடவுள் உங்களை எவ்வெவ்வழிகளில் நிறைவாக ஆசீர்வதித்திருக்கிறார்? கடவுளிடமிருந்து நீங்கள் பெற்ற ஆசிகளை உடனடியாக உணர முடியவில்லை என்றால், “உங்கள் ஆசிகளை எண்ணிப் பார்ப்பதற்கு” இன்னும் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கலாம் என்பதற்கு அது ஒரு நல்ல அறிகுறி. கடவுள் நமக்கு வழங்கியுள்ள எண்ணற்ற ஆசிகள்மீது நம் பார்வையைப் பதித்து, அவற்றைக் கண்டுணர்ந்து, ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அவற்றில் மகிழ்வது நல்லது. அவற்றை நாம் எந்த அளவுக்குக் கண்டுணர்கிறோமோ, அந்த அளவுக்கு நன்றியுணர்வில் வளர்கிறோம்; நன்றியுணர்வில் எந்த அளவுக்கு வளர்கிறோமோ, அந்த அளவுக்கு மேலும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
ஆண்டவரே, என் வாழ்வில் நீர் பொழிந்துள்ள எண்ணற்ற ஆசிகளுக்காக ஆழ்ந்த நன்றியுணர்வுடன் உமக்கு நன்றி செலுத்துகிறேன். அந்த ஆசிகளை நாள்தோறும் மேலும் உணர்ந்துகொள்ளவும், அவற்றுக்காக நன்றியுள்ளவனாக இருக்கவும் எனக்கு உதவும். வாழ்வே ஒரு கொடை என்பதையும், இரவும் பகலும் நீர் என் வாழ்வில் செயலாற்றுகிறீர் என்பதையும் கண்டுணர எனக்கு உதவும். குறிப்பாக, வாழ்க்கை கடினமாக இருக்கும்போதோ, ஏதோ ஒரு சுமை என்னை அழுத்தும்போதோ இந்த ஆசிகளைக் கண்டுணர எனக்கு உதவும். என் இதயம் நன்றியுணர்வால் நிறைந்திருக்கவும், உமது நன்மைத்தனத்தில் நான் என்றும் மகிழ்ந்திருக்கவும் அருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
தூய ஆவியாருக்கு நவநாள் செபம்
பெந்தெகொஸ்தே பெருவிழாவிற்கான தயாரிப்பாகச் செபிக்கப்படுவது
வெள்ளிக்கிழமை, மே 15 – சனிக்கிழமை, மே 23
பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




