தமிழ்

சிந்தனை 137: சிலுவையில் ஆற்றல்

படம்: peakpx.com வழியாக

காணொளி

நீங்கள் செபிக்கும்போது, எப்போதாவது அமர்ந்து சிலுவைத் திருவுருவத்தை உற்றுநோக்குகிறீர்களா?  வெளிப்பார்வையில், சிலுவைத் திருவுருவம் புரிந்துகொள்ள முடியாத ஓர் உண்மையாகத் தோன்றுகிறது.  இத்தகைய கொடூரமான ஒரு நிகழ்வை நாம் ஏன் உயர்த்திப் போற்ற வேண்டும்?  இறைமகன் கொடூரமாகக் கொல்லப்பட்டது, முதலில் நம்மைக் கவரும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்.  இருப்பினும், நம்பிக்கையோடு அதை உற்றுநோக்குவோருக்குச் சிலுவைத் திருவுருவம் ஆற்றலும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது. ஏனெனில், அது ஒரு பயங்கரமான, கொடூரமான கொலை மட்டுமல்ல; எல்லாவற்றிற்கும் மேலாக, பாவத்தையும் சாவையும் முழுமையாக வெற்றிகொண்ட நிகழ்வாகும்.  நம் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டது, இதுவரை அறியப்பட்டவற்றிலேயே மிகப் பெரிய அன்புச் செயலாகும். ஏனெனில், அந்தச் செயலால், தங்களை முழுமையாக அவரிடம் ஒப்படைத்து அவரை நாடுவோருக்காக அவர் சாவையும் பாவத்தையும் என்றென்றைக்கும் அழித்தார்.  நம்மையே பிறருக்குக் கையளித்து வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் சிலுவைத் திருவுருவம் நமக்கு உணர்த்துகிறது.  நாம் ஒவ்வொருவரும் அந்தச் சிலுவையில் ஏறி, நம்மையே பிறருக்குக் கையளித்து, கிறிஸ்துவோடு இறக்க அழைக்கப்பட்டுள்ளோம்.  ஏனெனில், அவரோடு இறப்பதால் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப்படுகிறது; அவரது உயிர்ப்பின் வெற்றியில் நாமும் பங்குபெற முடிகிறது.  நம் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டதை உற்றுநோக்குவது நம்மை உருமாற்றுகிறது; ஏனெனில், இந்தத் தன்னலமற்ற அன்புச் செயலால் பெற்றுத்தரப்பட்ட இரக்கத்தின் கதவுகளை அது திறக்கிறது (காண்க நாட்குறிப்பு #681).

சிலுவைத் திருவுருவத்தின் முன் செபிக்க முயலுங்கள்.  அமைதியாக அமர்ந்து அதை உற்றுநோக்க முயலுங்கள்.  “உற்றுநோக்குவது” என்பது வெறுமனே “பார்ப்பதைவிட” மேலானது.  நாம் உற்றுநோக்கும்போது, நம் கண்களுக்குத் தெரியும் திருவுருவத்தையும் கடந்து, இயேசுவை அந்தத் தருணத்திற்குக் கொண்டுவந்த அன்பின் ஆழத்தைப் பார்க்க முயல்கிறோம்.  நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்கவும், நிறைவான அன்பால் நம்மை அன்புசெய்யவும் இறுதிவரை செல்லத் தயாராயிருந்த எல்லையற்ற அன்பின் கடவுளை நாம் காண்கிறோம்.

ஆண்டவரே, உமது நிறைவான அன்புச் செயலை உற்றுநோக்கவும், என்மீதும் உலகம் முழுவதின்மீதும் இரக்கத்தைப் பொழியும் உமது இதயத்தைக் காணவும் நான் உண்மையாகவே விரும்புகிறேன்.  உமது பலி எனும் அளந்தறிய முடியாத கொடையைப் புரிந்துகொள்ளவும், இந்தக் கொடைக்காக என்றும் நன்றியுடன் வாழவும் எனக்கு உதவியருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

தூய ஆவியாருக்கு நவநாள் செபம்
பெந்தெகொஸ்தே பெருவிழாவிற்கான தயாரிப்பாகச் செபிக்கப்படுவது
வெள்ளிக்கிழமை, மே 15 – சனிக்கிழமை, மே 23

ஆண்டவரின் விண்ணேற்றம் பற்றிப் படியுங்கள்

பாஸ்கா காலச் செபங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்