தமிழ்

சிந்தனை 147: செயல்கள், சொற்கள், செபங்கள் வழியாக இரக்கம்

இளைய டேவிட் – உடல்சார்ந்த இரக்கச் செயல்கள் ஏழு

காணொளி

கடவுளின் அளவிட முடியாத இரக்கத்தின் கருவியாக மாற விரும்புகிறீர்களா?  அப்படியானால், உங்கள் செயல்கள், சொற்கள், செபங்கள் வழியாக அதைச் செய்யலாம்.  முதலில், உங்கள் செயல்களால் இரக்கத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை எப்போதும் விழிப்புடன் தேடிக்கொண்டிருக்க வேண்டும்.  பல வேளைகளில், வாய்ப்பு கிடைக்கும்போது (எடுத்துக்காட்டாக, மற்றொருவரை மன்னிக்கும் வாய்ப்பு), நாம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம்.  ஆனால், இத்தகைய வாய்ப்புகளைத் தேடுவதில் நாம் விழிப்புடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்; அவை கிடைக்கும்போது மகிழ வேண்டும்.  இரண்டாவதாக, உங்கள் சொற்கள் அருளையும் இரக்கத்தையும் வழங்கலாம்; அல்லது காயப்படுத்தித் தீங்கு விளைவிக்கலாம்.  கடுமையாகப் பேசுவதாலும், பேச வேண்டிய நேரத்தில் பேசத் தவறுவதாலும்கூட நாம் தீங்கு விளைவிக்கிறோம்.  கடவுளின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக, சவால்விடும் சொற்களாக இருந்தாலும்கூட, உண்மையான சொற்களை அன்புடன் பேசும்போது நாம் இரக்கத்தை வழங்குகிறோம்.  மூன்றாவதாக, பிறருக்காகச் செபிப்பதிலும் தியாகங்களை ஒப்புக்கொடுப்பதிலும் உள்ள வல்லமையை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம்.  உலகம் முழுவதற்காகவும், குறிப்பாகத் தனிநபர்களுக்காகவும் பரிந்துபேசி மன்றாடுவது, சாவியைத் திருப்பிக் கடவுளின் அருளின் கதவுகளைத் திறப்பதற்கான ஒரு வழியாகும்.  இன்றியமையாத இந்த இரக்கச் செயலைப் புறக்கணிக்காதீர்கள் (காண்க நாட்குறிப்பு #742).

உங்கள் செயல்கள், சொற்கள், செபங்கள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்.  நம் ஆண்டவர் தமது இரக்கத்தைப் பிறரிடம் கொண்டுசெல்ல உங்களைப் பயன்படுத்திய குறிப்பிட்ட வழிகளை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?  அவற்றில் சிலவற்றைக் கண்டறிய முயலுங்கள். இந்த மனச்சோதனையைச் செய்வது உங்களுக்குக் கடினமாக இருந்தால், உங்கள் வழியாகத் தமது இரக்கத்தை நாள்தோறும் இன்னும் அதிகமாகப் பொழிய ஆண்டவர் விரும்புகிறார் என்பதற்கு அது ஒரு நல்ல அறிகுறியாகும்.

ஆண்டவரே, என் சொற்களையும் செயல்களையும் செப வாழ்வையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன்.  உமது விருப்பப்படி என்னைப் பயன்படுத்தும்; நாள்தோறும் நீர் தரும் உள்ளத் தூண்டுதல்களுக்குச் செவிசாய்க்க எனக்கு உதவும்.  இவ்வுலகில் உமது நிறைவான அன்பைப் பரப்புவதற்கான வாய்ப்புகளை ஒவ்வொரு நாளும், நாள் முழுவதும், உண்மையான ஆர்வத்துடன் தேட எனக்கு உதவும்.  அன்பு ஆண்டவரே, என்னையே உமக்குக் கொடுக்கிறேன்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மே 27 – கான்டர்பரி புனித அகுஸ்தினார், ஆயர்—விருப்ப நினைவு

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்