தமிழ்

சிந்தனை 151: ஆன்மிக உறவு

புனித பெனடிக்டுடன் புனித ஸ்கொலாஸ்திக்கா படைப்பு: Lawrence OP, உரிமம் CC BY-NC-ND 2.0.

காணொளி

மற்றொருவருடன் உண்மையாகவே நெருக்கமாக இருப்பதற்கும், அவரை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதும் உங்கள் மனதிலும் இதயத்திலும் உள்ள ஒவ்வொன்றையும் பகிர்ந்துகொள்வதும் அவசியமா? இருவரின் ஆன்மாக்களும் கடவுளுடன் நெருக்கமாக இணைந்திருந்தால், அது அவசியமில்லை. அத்தகைய நிலையில், ஒவ்வொருவரும் தாங்கள் பகிர்ந்துகொள்ளும் ஒருமைப்பாட்டை உணர்ந்துகொள்வதற்கும் மற்றவரைப் புரிந்துகொள்வதற்கும் மிகச் சில வார்த்தைகளே போதும். ஒவ்வொருவரிலும் கடவுள் வாழும்போது, அவருடைய பிரசன்னமே அவர்களை ஒன்றிணைத்து, ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ள வழிசெய்கிறது. இதனால் ஆன்மிக உறவு என்னும் ஆசீர் விளைகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பேசிப் பகிர்ந்துகொண்டாலும்கூட, வேறு எந்த வழியிலும் இதை அடைய முடியாது. இருவரும் கடவுளை அறிந்திருப்பதால் உருவாகும் ஒருமைப்பாடு, ஓர் அழகிய நட்பை உருவாக்குவதில் மற்ற எல்லா வழிகளையும்விட மிக மேலானதும் மிகுந்த பயனளிப்பதுமாகும் (காண்க நாட்குறிப்பு #768).

உங்கள் நட்புகளைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உறவுகளின் அடித்தளம் என்ன? உங்கள் நட்புகள் உங்கள் நம்பிக்கை வாழ்விலும் கடவுள்மீது நீங்கள் கொண்டுள்ள அன்பிலும் வேரூன்றியிருக்கும் என நம்புகிறோம். உங்கள் நண்பர்களுடன் உங்கள் இறைநம்பிக்கையைப் பற்றி எவ்வளவு எளிதாகப் பேச முடிகிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எல்லா மக்களுக்கும் நட்பையும் அன்பையும் வழங்குவது நல்லதே; அதேவேளையில், ஆன்மிக உறவைப் பகிர்ந்துகொள்ளக்கூடியவர்களைத் தேடுவதும் நலமானதே. இத்தகைய ஆழ்ந்த அன்பையும் ஆன்மிக நட்பையும் நீங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடியவர்களிடம் தூய ஆவியார் உங்களை வழிநடத்த அனுமதியுங்கள். அவர்கள் வழியாக ஆண்டவர் தமது இரக்கத்தை உங்களுக்கு நிறைவாகப் பொழிந்து ஆசீர்வதிப்பார்.

ஆண்டவரே, உம்மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை என் வாழ்வில் கொடையாகத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். அந்த நட்புகளைச் சார்ந்திருக்கவும், அவற்றில் உமது இரக்கமிகு திருஇதயத்தைக் கண்டுகொள்ளவும் எனக்கு உதவியருளும். என் வாழ்வில் நீர் இடம்பெறச் செய்துள்ள அனைவருக்கும் நானும் இரக்கத்தின் கருவியாக இருக்க உதவியருளும். ஆண்டவரே, நீரே என் மிக நெருங்கிய நண்பர். விலைமதிப்பற்ற கொடையான உமது நட்பிற்காகவும், என்மீது நீர் கொண்டுள்ள அன்பிற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மே 31 – மகா பரிசுத்த மூவொரு இறைவன் பெருவிழா

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்