புனித பெனடிக்டுடன் புனித ஸ்கொலாஸ்திகா, ஆக்கம்: Lawrence OP, CC BY-NC-ND 2.0.
காணொளி
அளவுக்கு அதிகமாகப் பேச வேண்டும் என்ற தேவை, இறைவனுடன் ஒன்றித்திருக்கும் அக வாழ்வுக்கு உண்மையான ஓர் ஆபத்தாகும். இல்லை, பேசுவது பாவமல்ல; பல வேளைகளில் அது பிறரிடம் காட்டும் இரக்கச் செயலாகவும் இருக்கிறது. ஆனால், அளவுக்கு அதிகமாகப் பேசுவது இறைவனின் இரக்கத்திற்குத் தடையாக இருக்கும் நேரங்களும் உண்டு. பேசுவது, தன்னளவில் நல்லதும் அல்ல, தீயதும் அல்ல. இறைவனின் சிந்தனைக்கும் திருவுளத்திற்கும் ஏற்ப நம் வார்த்தைகளை அமைத்துக்கொள்வதே நோக்கம். அவ்வளவுதான். நாம் பேசும் வார்த்தைகளை, உண்மையை வெளிக்கொணரவும் இறைவனின் அன்பை வெளிப்படுத்தவும் உதவும் புனிதமான கருவியாகக் காண வேண்டும். அளவுக்கு அதிகமான வார்த்தைகளோ, இறைவன் அல்லது பிறர்மீது நமக்குள்ள அன்பிலிருந்து எழாத வார்த்தைகளோ, நாம் உணர்வதைவிட அதிகத் தீங்கு விளைவிக்கலாம். எனவே, உங்கள் பேச்சை ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவர் விரும்பும் விதத்தில், அவர் விரும்பும் நேரத்தில், அவர் விரும்பும் அளவுக்கு உங்கள் வழியாகப் பேச அவரை அனுமதிக்க முயலுங்கள் (காண்க நாட்குறிப்பு #1008).
நீங்கள் அதிகமாகப் பேசுகிறீர்களா? மிகக் குறைவாகப் பேசுகிறீர்களா? நாம் எத்தனை வார்த்தைகள் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல; சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான வார்த்தைகளைப் பேசுவதே முக்கியம். நம் வார்த்தைகள் பெரும் காயத்தை ஏற்படுத்தலாம்; அதேவேளையில், இறைவனின் இரக்கமாகிய குணமளிக்கும் தைலத்தையும் அவை கொண்டுவரலாம். கடந்த வாரத்தில் நீங்கள் நிகழ்த்திய உரையாடல்களைச் சிந்தித்துப் பாருங்கள். அவை இறைவனுக்கு உகந்தவையாக இருந்தனவா? அவை இறைவனுக்கு மாட்சி அளித்து, உங்களையும் பிறரையும் ஆன்மிக வாழ்வில் வளரச் செய்தனவா? ஆண்டவர் நீங்கள் சொல்ல வேண்டுமென விரும்பியதைச் சொல்லத் தவறிய சந்தர்ப்பங்களையும் சிந்தித்துப் பாருங்கள். சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் மௌனமாக இருந்த இத்தகைய தவறுகளும் காயத்தை ஏற்படுத்தலாம்; நம் உலகில் இரக்கம் குறைவதற்கும் காரணமாகலாம். உங்கள் பேச்சை ஆண்டவரிடம் ஒப்படைத்து, அவர் உங்கள் வழியாகத் தம்மை வெளிப்படுத்த அனுமதியுங்கள்.
ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன்; இன்று என் வார்த்தைகளை உமக்கு அர்ப்பணிப்பதன் வழியாக என் அன்பை உமக்குக் காணிக்கையாக்குகிறேன். தந்தையிடமிருந்து உரைக்கப்பட்ட நித்திய வாக்கு நீரே. மக்கள் அனைவரையும் விடுதலையாக்கும் உண்மை நீரே. நீர் என்னைப் பேச அழைப்பதை மட்டுமே பேசவும், நீர் பேசுவதை மட்டுமே கேட்கவும் எனக்கு ஞானத்தையும் தன்னடக்கத்தையும் துணிவையும் தாரும். என் நாவு இவ்வுலகின் இருளை ஊடுருவிச் செல்லும் வாளாகவும், என் செவி உமது இரக்கத்தை உறிஞ்சிக்கொள்ளும் கடற்பஞ்சாகவும் இருப்பதாக. இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்.
பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




