தமிழ்

சிந்தனை 197: நான் தாகமாயிருக்கிறேன்

கல்வாரி, பாவ் வெர்கோஸ் வரைந்த ஓவியம்

காணொளி

“நான் தாகமாயிருக்கிறேன்.”  இந்த இரண்டு எளிய சொற்களும் மிகுந்த பொருள் கொண்டவை.  நம் ஆண்டவர் சிலுவையிலிருந்து இவற்றைக் கூறினார்.  ஒரு படைவீரர் அவரது தாகத்தைத் தணிக்க, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்த கடற்பஞ்சை அவருக்கு அளித்து, சிறிது ஆறுதல் தர முயன்றார்.  காடியாக மாறிய திராட்சை இரசம், பாவத்தால் கெட்டுப்போன ஆன்மாவைக் குறிக்கும் அடையாளம்.  இந்தப் புளித்த திராட்சை இரசத்தைப் பருகியபின், “எல்லாம் நிறைவேறிற்று!” என்று இயேசு உரக்கக் கூறினார்.  பின்னர் அவர் உயிர் துறந்தார்.  இயேசு எதற்காகத் தாகம் கொள்கிறார்?  பாவியான உங்களுக்காக அவர் தாகம் கொள்கிறார்.  உங்கள் பாவங்களையும் அவை உங்கள் ஆன்மாவில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளையும் காரணமாகக் கொண்டு அவர் உங்களைவிட்டு விலகுவதில்லை; அவற்றையும் மீறி உங்களுக்காகத் தாகம் கொள்கிறார்.  உங்கள் அன்பிற்காக அவர் தாகம் கொள்கிறார்.  உங்கள் பாவங்களையும் மீறி, நீங்கள் இருக்கும் நிலையிலேயே அவரை அன்பு செய்வதன் வழியாக அவரது தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.  உங்கள் பாவங்களால் உங்கள் ஆன்மாவில் ஏற்பட்டுள்ள மாசைப் பொருட்படுத்தாதீர்கள்.  நீங்கள் உங்கள் வீழ்ச்சியுற்ற நிலையிலேயே அவரிடம் வருவது அவருக்கு நிறைவளிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில், காடியாக மாறிய திராட்சை இரசத்திலேயே நம் ஆண்டவர் நிறைவு கண்டார் (காண்க நாட்குறிப்பு #1032).

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.  உடல் நொறுங்கி, துன்புற்றவராய் அங்கே தொங்கும் இயேசுவைத் தியானியுங்கள்.  மிகுந்த அவமானத்திற்கு உள்ளான இந்த நிலையில், தமது துன்பத்தில் ஆறுதல் அளிக்குமாறு இயேசு உங்களை நோக்கிக் குரல் எழுப்புகிறார்.  அவர் உங்கள் அன்பை நாடுகிறார்.  அதை அவருக்கு அளிப்பீர்களா?  எல்லாம் நிறைவேறிற்று என்று அவர் உரக்கக் கூறும்படி, உங்களையே அவருக்கு அர்ப்பணிக்க முடியுமா?  நீங்கள் அவரை அன்பு செய்து, உங்கள் வாழ்வை அவருக்கு அளிக்கும்போது எல்லாம் நிறைவேறுகிறது.  இன்று செபத்தில் நம் ஆண்டவரிடம் செல்லுங்கள். நீங்கள் அவரை அன்பு செய்வதாகவும், இந்த வாழ்விலும் அதன்பின் நித்திய காலமும் அவருடன் வாழ விரும்புவதாகவும் அவரிடம் சொல்லுங்கள்.  இவ்வாறு செய்வதால், அவரது தாகத்தைத் தணிப்பீர்கள்.

ஆண்டவரே, உமது சொந்தத் துன்பத்திற்கும் வேதனைக்கும் நடுவிலும் எனக்காகத் தாகம் கொள்வதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.  சிலுவையில் தொங்கியபோது, எதையும் ஒதுக்கி வைக்காமல் உமது உயிரை எனக்கு அளித்ததற்காக உமக்கு நன்றி.  தாகம் கொண்ட என் ஆன்மாவை இறுதியில் நிறைவாகத் தணிக்கக்கூடியது உமது அன்பு மட்டுமே.  உடைந்துபோனவனாகவும் பாவியாகவும் இருக்கும் நான் உம்மிடம் வந்து, உமது தாகத்தைத் தணிக்க என்னிடமுள்ள அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கத் தேவையான அருளை எனக்குத் தாரும்.  அன்பு ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன்; உம்மை இன்னும் அதிகமாக அன்பு செய்ய எனக்கு உதவும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூலை 16 – கார்மேல் மலை அன்னை—விருப்ப நினைவு

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்