தமிழ்

சிந்தனை 196: பிறரில் இயேசுவை அன்பு செய்தல்

 படம் வழங்கியது Adobe Stock
காணொளி – ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த அலெக்ஸ் புரோய்மோஸ், CC BY 2.0, Wikimedia Commons வழியாக

காணொளிக்காட்சி

“என் சகோதரர்களில் மிகச் சிறியவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தாலும், அதை எனக்கே செய்கிறீர்கள்” (மத்தேயு 25:40) என்ற நற்செய்திப் பகுதி நமக்கு நன்கு தெரிந்ததே.  ஆனால் இதை நீங்கள் நம்புகிறீர்களா?  நீங்கள் இதை நம்பினால், இயேசுவை அன்பு செய்வது எளிது என்பதையும், நாள் முழுவதும் நீங்கள் பிறரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது என்பதையும் கண்டுகொள்வீர்கள்.  அது ஓர் அன்பான புன்னகை அல்லது சொல் வழியாக இருக்கலாம்.  தாராளமாக வழங்குதல், மன்னித்தல் அல்லது பணிவிடை செய்தல் வழியாக இருக்கலாம்.  ஆனால் நீங்கள் அன்போடு பிறருக்கு எதைச் செய்தாலும், அதை இயேசுவுக்கே செய்கிறீர்கள்.  இது உண்மை.  அதேபோல், நாம் பிறரைக் கடுமையாகவோ இரக்கமின்றியோ நடத்தும்போது, நம் ஆண்டவரின் இதயத்தைக் காயப்படுத்துகிறோம் என்பதும் உண்மையே.  இந்த அடிப்படை உண்மையை ஒரு கருத்தாக நம் மனத்தில் புரிந்துகொள்வது எளிது; ஆனால் நம் செயல்கள் வழியாகப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல.  உண்மையாகவே பிறரில் இயேசுவைக் காண்பதும், அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் வழியாக நம் ஆண்டவரை அன்பு செய்கிறோம் என்று நம்புவதும் கடினமாக இருக்கலாம்.  ஆனால் நம்புவது கடினமாக இருக்கிறது என்பதற்காக, அதை நாம் நம்பாமலும் அதன்படி வாழாமலும் இருக்க வேண்டும் என்று பொருளல்ல (காண்க நாட்குறிப்பு #1029).

நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள்.  அவர்களைப் பார்க்கும்போது, அவர்களது உடனிருப்பை நம் ஆண்டவரை அன்பு செய்வதற்கான ஓர் அழைப்பாகக் காண்கிறீர்களா?  இவ்வாறு செய்வது கடினமாக இருக்கிறதா?  இயேசு அவர்களுக்குள் மறைந்திருந்து, நம் அன்புக்காகக் காத்திருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும்.  இன்று நீங்கள் சந்திக்கும் மனிதர்களில் மறைந்திருந்து உங்களுக்காகக் காத்திருக்கும் உங்கள் ஆண்டவரைப் பற்றிச் சிந்தியுங்கள்.  அவர்கள் வழியாக நம் ஆண்டவரை அன்பு செய்யத் தயங்காதீர்கள்.  ஏனெனில், அவர்களில் இறை இரக்கத்தின் ஊற்று திறக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறது.

ஆண்டவரே, நான் அன்றாடம் சந்திப்பவர்களுக்கு மிகுந்த இரக்கத்தைக் காட்ட வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்.  அவர்களில் உம்மைக் காணவும், நான் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் உம்மை அன்பு செய்யவும் எனக்கு அருள் தாரும்.  அன்பு ஆண்டவரே, உம்மைக் காணும் கண்களை நான் பெற்றிருப்பேனாக; பிறரில் உம்மைக் கண்டுகொள்ளும்போது, நீர் எனக்குத் தரும் இரக்கத்தால் அவர்களை அன்பு செய்து, என் இதயத்தை அவர்களுக்குத் திறக்க எனக்கு உதவியருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூலை 15 – ஆயரும் திருச்சபையின் மறைவல்லுநருமான புனித பொனவெந்தூரின் நினைவு

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்