தமிழ்

சிந்தனை 206: ஆன்மிகப் பதுக்கல்

செல்வரும் இலாசரும் பற்றிய உவமை, யான் ஸ்டீன் வரைந்த ஓவியம்

காணொளி

ஆன்மிக வாழ்வுக்கு நேரக்கூடிய ஓர் உண்மையான ஆபத்தை “ஆன்மிகப் பதுக்கல்” என்று அழைக்கலாம். இத்தகையவர் தம்மையே கடவுளின் இரக்கத்தின் இறுதிப் பயனாளியாக ஆக்கிக்கொள்ள முயல்கிறாரே அன்றி, கடவுளின் இரக்கத்தின் கருவியாக மாற முயல்வதில்லை. கடவுளின் இரக்கத்தின் இறுதிப் பயனாளியாக இருக்க முயல்வதால், ஒருவர் ஆன்மிகப் பேராசை கொண்டவராகி, தமது சொந்த நோக்கத்திற்காக ஆன்மிகக் காரியங்களை நாடுகிறார். இது செருக்கின் ஒரு வடிவம். புனிதராகத் “தோன்றுவதற்காக” ஒருவர் செய்யும் செயலாகச் செபம் மாறிவிடுகிறது. பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக நற்செயல்கள் செய்யப்படுகின்றன. மேலும், ஞானமும் கல்வியறிவும் உடையவராகத் தோற்றமளிப்பதற்காக ஒருவர் பல ஆன்மிக நூல்களைச் சேர்த்துவைக்க முயலலாம். ஆனால் கடவுளின் இரக்கத்தின் இன்றியமையாத நோக்கம் “ஆன்மிகப் பதுக்கல்” அல்ல; மாறாக, “ஆன்மிகத் தாராள மனப்பான்மை” ஆகும். உண்மையான இரக்கம் நம் வாழ்வில் பொழிய வேண்டுமென நாம் விரும்பினால், அதை நாம் பிறருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். கடவுள் நமக்குத் தரும் அனைத்தையும், பிறருக்குப் பகிர்ந்தளிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கொடையாக நாம் காண வேண்டும். எனவே, கடவுள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அருளைத் தரும்போது, இந்தக் கொடையை மற்றொருவரின் வளர்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதே முதலில் உங்கள் மனத்தில் எழ வேண்டும். கடவுளின் இரக்கத்தைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதால், நாம் மேலும் மேலும் செழுமை அடைகிறோம்; ஆன்மிகத் தாராள மனப்பான்மையுடன் செய்யும் இந்தச் செயல், நம் சொந்த வாழ்விலும் கடவுளின் இரக்கத்தைத் தொடர்ந்து பெருகச் செய்வதைக் காண்கிறோம் (காண்க: நாட்குறிப்பு #1069).

நீங்கள் புனிதத்தை நாடுகிறீர்களா? அப்படியானால், ஏன்? உங்களைத் தூண்டுவது எது? நீங்கள் நல்லவராகத் தோன்ற வேண்டும் என்பதற்காகவா? அல்லது உண்மையிலேயே நல்லவராக மாறி, தேவையில் இருப்போருக்குக் கடவுளின் நன்மையைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதற்காகவா? உங்கள் வாழ்வில் கடவுளின் இரக்கம் இறுதியாக விளைவிக்க வேண்டிய பயனைக் குறித்துச் சிந்தியுங்கள். கடவுள் உங்களுக்குத் தரும் அனைத்தும், இறுதியில் அவரது இரக்கத்தைப் பிறருக்குத் தாராளமாகப் பகிர்ந்தளிப்பதற்கு வழிவகுப்பதை உறுதிசெய்யும் வழிகளை நாடுங்கள். இவ்வாறு நீங்களும் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

எல்லையற்ற இரக்கமுள்ள ஆண்டவரே, உமது அருளைப் பிறருக்கு எந்த அளவுக்குப் பகிர்ந்தளிக்கிறேனோ, அந்த அளவுக்கு அது பெருகுகிறது என்பதை நான் உணர உதவியருளும். எப்போதும் உமது இரக்கத்தின் புனிதமான கருவியாக இருக்கவும், தாராள மனத்துடன் செய்யும் இச்செயலில் உமது வள்ளல் இதயத்தின் நிறைவைப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூலை 25 – திருத்தூதரான புனித யாக்கோபு திருவிழா

 

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்