படம்: Pixabay வழியாக
நம் வாழ்வின் அழைப்பை இறைமயமாவதற்கான அழைப்பு என்று விவரிக்கலாம். இதன் பொருள் என்ன? நம்மைத் தமது வாழ்விற்குள்ளேயே ஈர்த்துக்கொள்வதற்காகக் கடவுள் மண்ணுலகிற்கு வந்து, நமது மனித இயல்பை ஏற்றுக்கொண்டார் என்பதே இதன் பொருள். ஒரு வகையில், நாம் கடவுளாகும்படி அழைக்கப்படுகிறோம். “இறைமயமாதல்” என்னும் இக்கருத்து, இரேனியுஸ், மறைசாட்சி யுஸ்தின், அத்தனாசியுஸ், அலெக்சாந்திரியாவின் கிளமெண்ட், புனித அகுஸ்தினார் போன்ற தொடக்ககாலத் திருச்சபைத் தந்தையரிடையே பரவலாக இருந்தது. நமது இயல்பு இறைத்தன்மை கொண்டதாக மாறுகிறது என்ற பொருளில் நாம் கடவுளாக வேண்டும் என்பதல்ல; அப்படிக் கூறுவது ஒரு தப்பறையாக இருக்கும். மாறாக, அவரது இறைவாழ்வில் பங்குபெற்று, முழுமையான ஒன்றிப்பில் அவரோடு ஒன்றாவோம் என்ற பொருளிலேயே நாம் கடவுளாகும்படி அழைக்கப்படுகிறோம். கடவுள் ஒரு பெருங்கடலாகவும், நாம் அந்தப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஒரு நீர்த்துளியாகவும் இருப்பதற்கு இது ஒப்பாகும். நம்மைக் குறிக்கும் அந்த நீர்த்துளியின் தனிப்பட்ட துகள்கள் அதே ஒரு துளியாகவே இருந்தாலும், கடவுளைக் குறிக்கும் பெருங்கடலின் நீரால் அது உள்வாங்கப்படுகிறது. நாம் கடவுளில் வாழ்வதுபோல, கடவுள் நம்மில் வாழும் அளவுக்கு அவரோடுள்ள நமது ஒன்றிப்பு முழுமையடைய வேண்டும் (காண்க நாட்குறிப்பு #1289).
இறைமயமாவதற்கான உங்கள் அழைப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். இரக்கமுள்ள நம் கடவுளோடு நாம் கொண்டிருக்க அழைக்கப்படும் ஆழ்ந்த ஒன்றிப்பை இக்கருத்து வெளிப்படுத்துவதால், இது நமது கிறிஸ்தவ அழைப்பின் மையத்தைத் தொடுகிறது. நீங்கள் தமது வாழ்வில் பங்குபெறவும், எல்லா வகையிலும் தம்மோடு ஒன்றாகவும் அவர் விரும்புகிறார். இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம் என்றாலும், இதுவே உங்கள் அழைப்பு என்பதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று இக்கருத்தைப் பற்றிச் சிந்தித்து, நம் ஆண்டவரோடு ஒன்றாகவும், அவரது வாழ்விலேயே பங்குபெறவும் உங்களையே அவருக்கு ஒப்படைக்கிறீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள்.
ஆண்டவரே, உமது நிறைவான திருவுளத்திற்கும் அளவற்ற இரக்கத்திற்கும் ஏற்ப என்னிடம் வந்து என்னை இறைமயமாக்கியருளும். வாழ்வில் இத்தகைய மகிமையும் மேன்மையும் கொண்ட அழைப்பை எனக்கு அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்; நீர் விடுக்கும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். அன்பு ஆண்டவரே, என் வாழ்வு உமக்கே உரியது; என்னை மாற்றியமைத்தருளும், என்னை முழுமையாக ஆட்கொள்ளும், உமது திருவுளப்படி என்னை நடத்தும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
வியாகுல அன்னைக்கு நவநாள் செபம்
மரபுப்படி செப்டம்பர் 7–15 வரை செபிக்கப்படுகிறது
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




