தமிழ்

சிந்தனை 187: புயலுக்குப் பின் ஒரு வானவில்

படம்: pxhere,CC0 வழியாக

காணொளி

படைப்பே இறைவனின் மாட்சியைப் பறைசாற்றி, நம்பிக்கை சார்ந்த உண்மைகளை நமக்குக் கற்பிப்பது வியப்புக்குரியது.  வானவில்லை எடுத்துக்கொள்ளுங்கள்.  அது ஒளிமிக்கதாகவும் அழகாகவும், வண்ணமயமாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கிறது.  வானவில்லைப் பார்க்கும்போது அனைவரும் மகிழ்கிறார்கள்.  ஆனால் மழையோ புயலோ இல்லாமல் வானவில் என்ற ஒன்றே இருக்காது.  வாழ்க்கையும் அப்படித்தான்.  நமக்கு நல்ல நாள்களைத் தொடர்ந்து துன்பமான நாள்களும், துன்பமான நாள்களைத் தொடர்ந்து நல்ல நாள்களும் வரும்.  இவற்றில் எதைக் கண்டும் நாம் ஆச்சரியப்படக் கூடாது.  மகிழ்ச்சி நிறைந்த ஒரு நல்ல நாளில் நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்; அந்த “வானவில்” ஒரு கொடை என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.  துன்பமான நாள்களில் அதை நினைவுகூரும் வகையில் நாம் அதைச் சுவைத்து மகிழ வேண்டும்.  துன்பமான ஒரு நாள் வரும்போதும் நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.  அவரை எதிர்நோக்கிப் பொறுமையுடன் காத்திருந்தால் இதுவும் கடந்துபோகும் என்பதை நாம் அறிந்திருப்பதற்காக அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.  வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது; ஆனால் இறைவனின் இரக்கமோ என்றென்றும் நிலைத்திருக்கிறது. அது எல்லாவற்றையும் கடந்து செல்ல நம்மைத் தாங்கிச்சென்று, புயல் ஓய்ந்தபின் நாம் மகிழ்ந்திருக்க வழிசெய்யும் (காண்க நாட்குறிப்பு #992).

வானவில்லுக்கும் புயலுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை இன்று சிந்தித்துப் பாருங்கள்.  ஒளிரும் வண்ணங்களால் நிறைந்து, வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை விரிந்திருக்கும் வானவில்லை மனக்கண்ணில் காணுங்கள்.  அது அழகாகவும் உள்ளத்திற்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது; புன்னகையையும் மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கிறது.  இப்போது, அதற்கு முன்பு வீசிய புயலோடு அதை ஒப்பிட்டுப் பாருங்கள்.  புயலின் நடுவில், பின்னர் தோன்றவிருக்கும் வானவில்லைப் பற்றி யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.  மாறாக, பாதுகாப்பான இடம் தேடுவதே முதன்மையான கவலையாக இருக்கும்.  இது உங்கள் சொந்த வாழ்க்கையை எவ்வாறு ஒத்திருக்கக்கூடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.  வேதனையை உணரும்போதோ, சவால்கள் உங்களைச் சூழ்ந்து தாக்கும்போதோ ஓடி ஒளிந்துகொள்கிறீர்களா?  ஒவ்வொரு போராட்டமும் ஒரு வானவில் தோன்றுவதற்கு முன்னோடியாக இருக்கிறது என்பதையும் உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.  இறைவனின் இரக்கம் வழங்கும் ஆசிகளை உங்கள் மனத்தில் உயிரோட்டத்துடன் வைத்திருங்கள்; அப்போது அவை நாள்தோறும் வாழ்க்கையின் சவால்களைக் கடந்து செல்ல உங்களைத் தாங்கிச்செல்லும்.

ஆண்டவரே, எந்நேரமும் என் பார்வை உம்மீதே நிலைத்திருக்கச் செய்தருளும்.  வாழ்க்கையின் ஒவ்வொரு புயலின் நடுவிலும் நான் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தக்கவைத்துக்கொள்வேனாக.  நான் ஒடுக்கப்படுவதாகவும், தாக்குதல்களால் சூழப்படுவதாகவும் உணரும்போது, இதுவும் கடந்துபோகும் என்பதையும், என் போராட்டங்களையும் என் வாழ்க்கையையும் நீர் நிறைவான, மகிழ்ச்சிமிக்க முடிவுக்குக் கொண்டுவருவீர் என்பதையும் தயவுசெய்து எனக்கு நினைவூட்டும்.  இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூலை 6 – புனித மரியா கொரெட்டி, கன்னியும் மறைசாட்சியும்—விருப்ப நினைவு

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்