தமிழ்

சிந்தனை 25: உள்மனத் துன்பம் – இரக்கத்திற்கான ஒரு பாதை

“பாலைவனத்தில் செபிக்கும் புனித புருனோ” — வரைந்தவர்: நிக்கோலா மின்யார்

காணொளி

கடவுளோடு உங்களுக்குள்ள உறவு ஆழமடையும்போது, போராட்டம் நிறைந்த பல தருணங்களையும் ஆறுதல் நிறைந்த பல தருணங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.  ஆன்மிக வறட்சியும் உள்மனத் துன்பமும் ஏற்படும் தருணங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்.  அவை அவசியமானவை; உங்களைப் புனிதப்படுத்தக் கடவுள் கையாளும் வழிமுறையின் ஒரு பகுதியும் ஆகும்.  அந்தத் தருணங்களில், இயேசுவை நோக்கி உங்கள் கண்களை உயர்த்துங்கள்.  அவரை அவரது மாட்சியில் கண்டு, அவரது இரக்கத்தை மன்றாடுங்கள் (காண்க: நாட்குறிப்பு #22-23).

இன்று உங்கள் ஆன்மாவை நேர்மையுடன் ஆராய்ந்து பாருங்கள்.  உங்கள் உள்ளத்தில் நீங்கள் அனுபவிக்கும் அனைத்தையும் சிந்தித்துப் பாருங்கள்.  குறிப்பாக, உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் அனைத்தையும் சிந்தித்துப் பாருங்கள்.  உங்கள் உள்ளத்தில் வலியும் துன்பமும் இருப்பதைக் காண்கிறீர்களா?  அது உங்கள் சொந்தப் பாவத்தின் விளைவாக இருந்தால், அதை நீங்கள் உணர்ந்துகொள்வதற்காக மகிழுங்கள்.  கடவுள் உங்களைத் தூய்மைப்படுத்துவதன் விளைவாக அது இருந்தால், இந்த ஆன்மிக வறட்சியை நீங்கள் கடந்து செல்ல அனுமதிக்கும் அளவுக்கு அவர் உங்களை அன்புசெய்கிறார் என்பதற்காக மகிழுங்கள்.  விண்ணகத்தை நோக்கி, உங்கள் உள்ளத்தில் நீங்கள் அனுபவிக்கும் அனைத்திற்காகவும் நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், உங்கள் ஆன்மாவில் இருப்பது, உங்களைத் தம்மிடம் அழைத்துச் செல்லும் கடவுளின் உடனிருப்பே.

ஆண்டவரே, சில வேளைகளில் என் உள்ளம் வறண்டு, உயிரற்றுக் கிடப்பதுபோல் உணர்கிறேன்.  சில வேளைகளில் நீர் எங்கே இருக்கிறீர் என்றும், என்னோடு இருக்கிறீரா என்றும் எண்ணுகிறேன்.  அந்தத் தருணங்களில் எதிர்நோக்குடனும் நம்பிக்கையுடனும் இருக்கவும், உம்மீது இன்னும் ஆழமான விசுவாசம் கொள்வதற்கான பாதையாக அவற்றைக் காணவும் எனக்கு உதவும்.  உமது இரக்கத்தின் வாயில்கள் இன்னும் அகலமாகத் திறக்கப்படும்படி, இந்தத் தருணங்களில் உம்மை நோக்கித் திரும்ப எனக்கு உதவும்.  இயேசுவே, உம்மை நம்புகிறேன்.

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்