படம்: கெர்ட் ஆல்ட்மான் — Pixabay
நீங்கள் இறைவனுடன் மேலும் நெருங்கி வரும்போது, சில வேளைகளில் பலவிதமான உணர்வுகளை அனுபவிப்பீர்கள். சிலர் இறைவனால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வார்கள். இறைவன் நம்மை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. ஆயினும், புறக்கணிக்கப்பட்டதாக உள்ளத்தில் எழும் உணர்வுகள் உண்மையானவையாக இருக்கலாம். இது சிலரை நம்பிக்கையிழக்கச் செய்கிறது. இப்போதோ எதிர்காலத்திலோ நீங்கள் நம்பிக்கையிழப்புடன் போராட நேர்ந்தால், அஞ்சாதீர்கள்; அதற்கு இடங்கொடுத்துவிடாதீர்கள். அந்த அனுபவத்தில் இறைவன் உங்களிடம் வரவும், அதைத் தாங்கித் துன்புறும் உங்களுடன் உடனிருக்கவும் அவரை அனுமதியுங்கள் (காண்க நாட்குறிப்பு #23).
இன்றும் உங்கள் இதயத்தின் ஆழத்தைத் தொடர்ந்து நோக்குங்கள். அங்கே நீங்கள் என்ன காண்கிறீர்கள்? உள்ளத்தை நோக்குவது வேதனை தருவதாக இருந்தால், இந்த வேதனை இறைவனை நோக்கிச் செல்லும் ஒரு பாதை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இது புரிந்துகொள்ள முடியாததாகவும் கடினமானதாகவும் இருக்கலாம். ஆனால் தந்தையாம் கடவுள் தம் மகனுக்குச் சிலுவையின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். இயேசு தமது சிலுவையைப் புறத்திலும் அகத்திலும் ஏற்றுக்கொண்டதன் வழியாக, மனித இயல்பு முழுவதையும் தமது இறைத்தன்மையுடன் இணைத்தார். இன்று உங்கள் துன்பம் நீங்கள் புனிதமடைவதற்கான வழியாகவும், இறைவனுடன் நீங்கள் ஒன்றித்திருப்பதற்கான ஊற்றாகவும் அமையட்டும்.
ஆண்டவரே, என் இதயத்தின் ஆழத்தை நான் தொடர்ந்து நோக்கும்போது, நீர் என்னைப் பார்ப்பதுபோல நானும் என்னைப் பார்க்க உதவியருளும். நான் சுமக்கும் வேதனைகளையும் துன்பங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டு கையாள எனக்கு உதவியருளும். நீர் செய்தது போலவே, அந்த அக வேதனையை என் முழு விருப்பத்துடன் உமது சிலுவையோடு இணைக்க எனக்கு உதவியருளும். இவ்வாறு செய்வதன் வழியாக, உலகிற்காக நீர் பெற்றுத் தந்த இறை இரக்கத்தைக் கண்டுணர எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
ஜனவரி 26: புனிதர்கள் திமொத்தேயு, தீத்து, ஆயர்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




