அன்னாவின் இல்லத்தில் இயேசு — ஓவியர்: ஹோசே தெ மத்ராசோ இ அகூதோ
பிறருடனான உங்கள் உறவுகளில், சில நேரங்களில் உங்களை அவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதாக உணர்கிறீர்களா? நெருங்கிய குடும்ப உறுப்பினர், நண்பர், உடன் பணியாற்றுபவர் என யார் வேண்டுமானாலும் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். சிக்கல் என்னவென்றால், உங்கள் மனதிலும் இதயத்திலும் உள்ளவை, உங்கள் விருப்பம், நோக்கம், கடந்தகால அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்தே உங்கள் செயல்களை வழிநடத்துகின்றன. இவை அனைத்தையும் இறைவனைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்வதில்லை. பெரும்பாலான நேரங்களில், நாம் என்ன செய்கிறோம், ஏன் அதைச் செய்கிறோம் என்பதை நாமே முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை. இதன் விளைவாக, நம்மையும் நமக்குள் நிகழ்வதையும் பிறர் புரிந்துகொள்ளத் தவறுவது எளிது. அவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்வதும், நமக்குத் தீர்ப்பளிப்பதும்கூட எளிதில் நிகழலாம். இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம்; ஆனால், இது நம்மை அலைக்கழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. மாறாக, நம் ஆண்டவர் என்ன நினைக்கிறார் என்பதில் மட்டுமே நாம் அக்கறை கொள்ள வேண்டும். அவருடைய எண்ணமும் தீர்ப்பும் மட்டுமே முக்கியமானவை. பிறர் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ளும் அனுபவம் சில நேரங்களில் நமக்கு ஏற்படலாம். இதனை, முதன்மையாகப் பிறர்மீதான நமது இரக்கத்தைச் சோதித்து வலுப்படுத்துவதற்காக நம் ஆண்டவர் தமது திருவுளத்தால் அனுமதிக்கும் ஒன்றாக நாம் காண வேண்டும் (காண்க: நாட்குறிப்பு #700).
அண்மையில் யாராவது உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட ஒரு தருணத்தை நினைவுகூர முடியுமா? அப்படியானால், அதனால் கோபப்படவோ மனம் புண்படவோ இடமளிப்பதற்குப் பதிலாக, உங்கள் இரக்கமுள்ள இதயத்தின் ஆழத்தைச் சோதிக்க அதை அனுமதியுங்கள். இந்த அவமானத்தை அருளோடு ஏற்றுக்கொள்ளுங்கள். தம்மீது சுமத்தப்பட்ட அதே தவறான புரிதலிலும் தீர்ப்பிலும் நீங்களும் பங்குபெற இறைவன் அனுமதித்ததற்காக அவருக்கு நன்றி கூறுங்கள். இதன் வழியாக, அவருடைய இறை இரக்கத்தைப் பகிர்ந்தளிப்பதில் பங்குபெற அழைக்கப்படும் பேற்றை நீங்கள் பெறுகிறீர்கள்.
ஆண்டவரே, இரக்கமுள்ள இதயத்தை எனக்குத் தாரும். நான் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போது, அதை அருளுக்கும் மன்னிப்புக்கும் இரக்கத்திற்குமான வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள எனக்கு உதவியருளும். இத்தகைய சோதனையை நான் தாங்கிக்கொள்ள அனுமதிக்கும் அளவுக்கு என்னை அன்பு செய்வதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். அன்பு ஆண்டவரே, நீர் தாங்கிக்கொண்ட அனைத்திற்கும் நான் சாட்சியாக இருக்கும்படி, எனக்குள்ளும் என் வழியாகவும் நீர் செயலாற்றுவதற்காக என்னையே உமக்குக் கையளிக்கிறேன். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
தூய ஆவியாருக்கு நவநாள் செபம்
பெந்தெகொஸ்தே பெருவிழாவிற்கான தயாரிப்பாகச் செபிக்கப்படுவது
வெள்ளிக்கிழமை, மே 15 – சனிக்கிழமை, மே 23
மே 20 – சியேனா நகர்ப் புனித பெர்னார்தீன், அருள்பணியாளர்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




