தமிழ்

சிந்தனை 261: பிறரில் மறைந்திருக்கும் இயேசு

ஸ்விஷ்செவ்-பாவோலாவின் லைராவுடன் இருக்கும் பிச்சைக்காரர்

காணொளி

இயேசு வறுமையிலும் பசியிலும் குளிரிலும் வாடியவராக உங்களிடம் வந்து, தம்மைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.  இந்த அனுபவம் உங்களைத் திடுக்கிடச் செய்து, இவர் உண்மையிலேயே இயேசுதானா என்று கேள்வி எழுப்பக்கூடும்.  ஆனால், அவர் இயேசுதான்.  தேவையில் இருக்கும் மனிதர் வழியாக இயேசு ஒவ்வொரு நாளும் நம்மிடம் வருகிறார்.  ஒருவேளை வீடின்றி, பசியோடு, உடுத்த உடை தேவைப்படும் ஒருவரை நாம் சந்திக்கலாம்.  அப்படியானால், அவர் இயேசுதான்.  ஆனால், வேறுவிதமான பசியும் தாகமும் கொண்ட பலரையும் நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம்.  அன்பு, புரிதல், பரிவு, அக்கறை ஆகியவற்றிற்காகப் பலர் ஏங்கித் தவிக்கிறார்கள்.  அவர்கள் வெளிப்பார்வைக்கு நம்மை வரவேற்காதவர்களாகத் தோன்றலாம்; ஆனால் உள்ளுக்குள் அவர்கள் நம் ஆண்டவரே; உங்கள் இதயத்திலிருந்து இரக்கத்தைப் பெற அவர் நாடுகிறார்.  நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் நம் ஆண்டவர் பிரசன்னமாக இருப்பதைக் காணத் தயங்காதீர்கள்.  உங்கள் இதயத்தின் இரக்கத்தை அவர்கள்மீது, குறிப்பாக மிகவும் பரிதாபத்திற்குரிய ஆன்மாவின்மீது, தாராளமாகப் பொழியுங்கள்; அப்போது உங்கள் அன்பை இயேசுவின்மீதே தாராளமாகப் பொழிந்திருப்பீர்கள் (காண்க: நாட்குறிப்பு #1312).

ஏழைகளையும் பிச்சை எடுப்பவர்களையும் நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்?  உடல் சார்ந்த தேவைகள் உள்ளவர்களைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்து தொடங்குங்கள்; பின்னர் இன்னும் ஆழமாகச் சென்று, பிற தேவைகளோடு வாழும் அனைவரையும் எண்ணிப்பாருங்கள்.  கடின இதயம் கொண்டவர், பாவி, பெருமை கொண்டவர், ஆணவம் கொண்டவர், கோபம் நிறைந்தவர் போன்றவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.  உங்கள் நினைவில் வரும் ஒவ்வொருவரும், உங்கள் இதயத்தின் இரக்கத்தைச் சிறிது சுவைக்க உங்களிடம் வரும் நம் ஆண்டவரே.  இவர்களில் மிகச் சிறியவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தாலும், அதைக் கிறிஸ்துவுக்கே செய்கிறீர்கள்.  இதை நீங்கள் நம்புகிறீர்களா?  நம்புகிறீர்கள் என்றால், அந்த நம்பிக்கை நடைமுறையில் வெளிப்பட வேண்டும்: நீங்கள் எல்லோரிடமும், குறிப்பாக அன்பு செய்வதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக நீங்கள் கருதுவோரிடமும், இரக்கம் காட்ட வேண்டும்.  நடைமுறை வாழ்வைச் சார்ந்த இந்தக் கேள்வியை இன்று ஆழ்ந்து சிந்தியுங்கள். அடுத்து நீங்கள் சந்திக்கும் “பிச்சைக்காரர்” எவ்வளவுதான் விரும்பத்தகாதவராகத் தோன்றினாலும், அவரில் நம் ஆண்டவரைத் தேடிக் காண உறுதிகொள்ளுங்கள்.

ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன்; நான் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் உம்மைத் தேடிக் காண வேண்டும் என்பதை உணர்கிறேன்.  உம்மைக் காணும் கண்களையும் உம்மை அன்பு செய்யும் இதயத்தையும் எனக்குத் தாரும்.  அன்பு ஆண்டவரே, பிறரில் உம்மை நான் அன்பு செய்யும்போது, என் இதயத்தில் உள்ள இரக்கம் உமக்கு இனிய மகிழ்ச்சியை அளிக்க அருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்